Published : 24 Sep 2013 07:45 PM Last Updated : 24 Sep 2013 07:45 PM
கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக அவசரச் சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட உடனே எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்துள்ள நிலையில் அதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
தண்டிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவிப் பறிப்பிலிருந்து பாதுகாக்க வகைசெய்யும் மசோதா, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற முடியாமல் போனதால் அவசர சட்டம் கொண்டு வருவது என மத்திய அரசு முடிவு செய்தது என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான காலத்துக்கு ஒரு எம்.பி.அல்லது எம்.எல்.ஏ, தண்டிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வின் பதவி உடனடியாக பறிபோகும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 10ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை செல்லுபடியாகாமல் செய்திட சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு செய்து கடந்த கூட்டத் தொடரில் 'மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (இரண்டாம் திருத்தம்) மசோதா 2013’ மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா நிறைவேறவில்லை.
ஊழல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத் தண்டிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அவரது பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷீதுக்கு தண்டனை காலம் எவ்வளவு என்பதை சிபிஐ நீதிமன்றம் அடுத்த மாதம் அறிவித்தவுடன் மசூதின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி பறிபோகும் நிலைமை உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்த அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
'சிறையில் உள்ளவர்கள் போட்டியிடலாம்'
இதனிடையே, போலீஸ் காவலிலும் சிறையிலும் உள்ள அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கினார்.
மக்கள் பிரதிநிதித்துவ (சட்ட திருத்த) மசோதா 2013-க்கு குடியரசுத் தலைவர் கொடுத்துள்ள ஒப்புதலானது, காவலில் இருக்கும் அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை செல்லாததாக்கி உள்ளது.
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கபில் சிபல், கொண்டுவந்த இந்த உத்தேச சட்டத்துக்கு நாடாளுமன்றம் செப்டம்பர் 6ம் தேதி ஒப்புதல் வழங்கியது.
சிறையில் உள்ள கைதிகள், தேர்தல் சட்டத்தின்படி வாக்களிக்கத் தகுதி இல்லாதவர்கள் என்கிறபோது நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் தகுதியையும் அவர்கள் இழக்கிறார்கள் என ஜூலை 10-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அரசு மனு தாக்கல் செய்தது. அதன்பின் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. மசோதாவை தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் பேசிய கபில் சிபல், சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம். சில நேரங்களில் நீதிமன்றங்களும் தவறு செய்கின்றன. இந்த பிரச்சினையில் நீதிமன்றம் செய்த தவறை நாம் சரி செய்கிறோம் என்கிறோம் என்று குறிப்பிட்டார்.
லாலு வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு
பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் செப்டம்பர் 30ம் தேதி (திங்கள்கிழமை) தீர்ப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT