Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM

நதிநீர் பிரச்சினைக்கு காங்கிரஸே காரணம் - நரேந்திர மோடி குற்றச்சாட்டு

நதிநீர் பகிர்வு பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் கட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சியே காரணம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலையொட்டி சுமர்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது:

நதிநீர் பகிர்வு தொடர்பாக பல்வேறு மாநிலங்களுக்கு இடையே பிரச்சினைகள் நீடிக்கின்றன. இதற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸே காரணம். பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. இதனால் சகோதரர்கள், ஜாதிகள், சமூகங்களுக்கு இடையே அந்தக் கட்சி பிளவை ஏற்படுத்துகிறது.

நர்மதை நதிநீரில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு போதிய பங்கு கிடைப்பது இல்லை. அதற்கு மத்திய அரசே காரணம். சர்தார் சரோவர் அணை மதகுகள் திட்டத்தை மத்திய அரசு வேண்டுமென்றே காலதாமதப்படுத்தி வருகிறது. அந்தப் பணி நிறைவடைந்தால் ராஜஸ்தான் மாநிலத்துக்கு நர்மதை நதியில் இருந்து கூடுதல் தண்ணீர் கிடைக்கும். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் சித்து விளையாட்டுகளை நடத்தி வருகிறது.

ஆந்திரத்தைப் பிரிக்க மத்திய அமைச்சரவை ஒப்பு தல் அளித்துள்ளது. இந்த விவ காரத்தால் சீமாந்திரா, தெலங்கானா பிராந்தியங்கள் பற்றி எரிகின்றன. இந்த இரு பிராந்தியங்களுக்கும் இடையே இப்போது நதிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இதுபோல் காங்கிரஸ் கட்சி செய்யும் பாவங்களால்தான் மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

பாஜகவை பொறுத்தவரை வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. குஜராத் இன்று அமோக வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கு நான் காரணம் அல்ல. பாஜக ஆட்சியைத் தேர்ந்தெடுத்த மக்கள்தான் காரணம்.

அதேபோல் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் வாக்களித்தால் இந்த மாநிலம் அமோக வளர்ச்சி பெறும். காங்கிரஸ் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசுவது இல்லை. மக்களுக்கு இலவசங்களை அறிவித்து ஏமாற்றி வருகிறது.

பாலி பகுதி மக்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டால் ராஜஸ்தானில் சிகிச்சை பெறுவது இல்லை. அதற்கான வசதிகளும் இங்கு இல்லை. அதனால்தான் அருகில் உள்ள குஜராத் மாநிலத்துக்கு வருகிறார்கள்.

ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று 2009 மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை பணவீக்கம் குறையவில்லை என்றார் நரேந்திர மோடி. ஜோத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களிலும் மோடி பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x