Published : 13 Aug 2014 07:54 PM
Last Updated : 13 Aug 2014 07:54 PM

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் திட்டங்களை திருடுகிறது மோடி அரசு: சோனியா

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டங்களையும் கொள்கைகளையும் 'திருடி', அவற்றை மோடி அரசு அப்படியே செயல்படுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.

டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, "ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது சவாலான காலத்தில் உள்ளது. சமீபத்தில் கண்ட தோல்வியால் தொண்டர்கள் சோர்வடைந்துவிட வேண்டாம். குறுகிய காலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி பெறும்.

மக்களை பிரித்தாளும் முயற்சி:

நாட்டில் மதவாத மோதல்களும் கலவரங்களும் அதிகரித்துள்ளன. இவை நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக உள்ளன. பல இடங்களில் நடக்கும் சகிக்க முடியா சம்பவங்கள், பாதுகாப்பு குறித்த அச்சத்தை மக்களிடையே எழுப்புகிறது.

பாஜகவும், அதனைச் சார்ந்த துணை அமைப்புகளும் நாட்டை பிளவுப்படுத்த முயலுகின்றன. மக்களை குழுக்களாக பிரித்து ஆளும் முயற்சியில்தான் அந்தக் கட்சி ஈடுபடுகிறது.

ஐ.மு.கூ. கொள்கைகளை திருடுகிறது:

இந்த வருடத்திற்கான பட்ஜெட்டை பாஜக அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் எந்த புது விஷயங்களும் இடம்பெறவில்லை. அவர்கள், காங்கிரஸின் திட்டங்களை திருடி, அதனை செயல்படுத்தும் விதத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெருமை சேர்த்துதான் வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில், எதிர்க்கட்சியாக இருந்து விமர்சித்த திட்டங்களை எல்லாம், தற்போது பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. இதற்காக நாம் பாஜகவுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும். நமது திட்டத்தை திருட அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

விலைவாசி உயர்வும் அந்நிய நேரடி முதலீடு கொள்கையும்:

சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு, சர்க்கரை மீதான மானியம், ரயில்வே துறையில் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு என அனைத்தும் தற்போதைய ஆட்சியில் மக்களை துன்புறுத்துவதாக நிகழ்ந்து கொண்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படாமல் இருந்ததாக அந்தக் கட்சி குற்றம்சாட்டியது.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடுக்கான அனுமதி வழங்குவது தொடர்பான மசோதாவுக்கு, முன்னதாக பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதனை தற்போது ஆதரிக்கிறது.

இது போல பல ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி கொள்கைகள் அனைத்தும் தற்போது தொடர்கின்றன. இதனைத் தாண்டி புதிய கொள்கைகள் என எதுவும் இந்த பாஜக ஆட்சியில் இல்லை. ஆனால் பாஜகவினர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி திட்டமின்றி செயல்பட்டதாக குற்றம்சாட்டினர்.

அனைத்துப் பிரச்சினைகளையும் தாண்டி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வருவது திருப்தி அளிப்பதாக உள்ளது" என்றார் சோனியா காந்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x