Published : 18 Nov 2013 10:07 PM
Last Updated : 18 Nov 2013 10:07 PM
சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் நாகரிகமற்ற முறையில் பேசியதாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
பாஜகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகாரில் காங்கிரஸ் கோரியுள்ளது. இந்த புகார் மனுவை காங்கிரஸ் சட்டப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கே.சி. பன்சால், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பேசியதற்கு எதிராகவே இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட அந்தப் புகார் மனுவில், 'சோனியா காந்தி குறித்தும், அவரது மகன் ராகுல் காந்தி குறித்தும் கண்ணியமற்ற வகையிலும், நாகரிகமற்ற முறையிலும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
மத்திய அரசு மாநிலங்களுக்கு தரும் நிதியுதவிப் பணம், ராகுலின் மாமன் வீட்டுப் பணமா? என்றும், உங்களுக்கு வியாதி உள்ள நிலையில், தைரியமிருந்தால் உங்கள் மகனிடம் பொறுப்புகளை ஒப்படையுங்கள் என்று சோனியா காந்தி குறித்தும் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். இது அரசியல் கட்சிச் தலைவர்களின் தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து பேசக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் வகையில் உள்ளது.
அதே போன்று பாஜக மூத்த தலைவரான சுஷ்மா ஸ்வராஜ், தொலைக்காட்சி நேர்காணலின்போது, ராகுல் காந்தி குழப்பத்தில் உள்ளதாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களை மக்களிடையே மோசமாக சித்தரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இதுபோன்ற கருத்துகளை பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர்.
பாஜக தலைவர்கள் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவதற்கு இடையூறாக உள்ளது. அக்கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்' என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, காங்கிரஸின் தேர்தல் சின்னத்தை விமர்சிக்கும் வகையில் ரத்தக்கறை படிந்த கை என்று மோடி விமர்சித்தது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் புகார் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT