Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் பட்டினியோடு படுத்து உறங்கினார்கள், இனிமேல் அப்படி ஒருநிலை ஏற்படாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
அமேதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டு புதிய ரயில் சேவைகளை தொடங்கிவைத்த அவர் புதிய ரயில்வே வழித்தடத்துக்கான அடிக்கல்லையும் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:
நான் பலமுறை கூறியிருக்கிறேன். புதிய ரயில் தடங்கள், விமான நிலையங்கள் மக்களின் பட்டினியைப் போக்காது. அதனால்தான் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த புரட்சிகர திட்டங்களால் நாட்டின் முகமே மாறியுள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் பட்டினியோடு படுத்து உறங்கினார்கள். இனிமேல் அப்படி ஒரு நிலை ஏற்படாது. அரை வயிற்றுக்கு சாப்பிட்டவர்கள் இன்று வயிறு நிறைய சாப்பிடுகிறார்கள். அண்மையில் நான் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களுக்கு சென்றிருந்தேன். அப்போதெல்லாம் இல்லாத இனம்புரியாத மகிழ்ச்சி அமேதியில் கிடைக்கிறது.
இந்தத் தொகுதியில் ரயில்வே பாதை அமைக்க வேண்டும் என்பது எனது தந்தை ராஜீவ் காந்தியின் கனவு. அந்தக் கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது. புதிய ரயில்கள், ரயில் தடம் மூலம் அமேதி தொகுதி விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றார்.
அமேதியில் இருந்து சலோன், சஹார் வரை 67 கி.மீட்டர் தொலைவுக்கு ரூ.380 கோடியில் ரயில்வே பாதை அமைப்பதற்கான அடிக்கல்லை ராகுல் நாட்டினார். மேலும் லக்னெள-பிரதாப்கர், லக்னெள- சுல்தான்பூர் ரயில் சேவைகளையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே பேசியபோது, இந்தப் பிராந்தியத்துக்கு வடக்கு ரயில்வே ரூ.4,800 கோடி வரை செலவிட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT