Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 25-ம் தேதி உரையாற்றிய மோடி, காங்கிரஸ் கட்சி அதிக விஷம் நிறைந்த கட்சி, அந்தக் கட்சி பதவி ஆசை என்ற நஞ்சுடன் வாழ்கிறது என்று பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு செயலாளர் கே.சி.மித்தல் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத்திடம் வியாழக்கிழமை புகார் மனு அளித்தார்.
இதேபோல் ராஜஸ்தான் மாநில பாஜக முதல்வர் வேட்பாளர் வசுந்தரா ராஜே கடந்த அக்டோபர் 10-ம் தேதி உரையாற்றியபோது, இலவச மருந்துகள் என்ற பெயரில் விஷம் கொடுக்கப்படுகிறது என்று பேசியதாகக் கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படுகிறது. இந்த மருந்துகளையே வசுந்தரா ராஜே விஷம் என்று குறிப்பிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பா கவும் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் காங்கிரஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸை கடுமையாக விமர்சித்த பாஜக மூத்த தலைவர் புபேந்திர யாதவ் மீதும் புகார் செய்யப்பட்டுள்ளது.
பாஜக தலைவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதித்து நடக்கவில்லை. முதல்வர் நரேந்திர மோடி வரம்பு மீறி பேசு கிறார். சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸின் புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு அவர்கள் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது நினைவு கூரத்தக்கது. -பி.டி.ஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT