Published : 16 Oct 2013 09:35 AM
Last Updated : 16 Oct 2013 09:35 AM
மோடியின் பெயரால் சிறுபான்மை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி காங்கிரஸ் ஓட்டு வேட்டையாடுவது ஏன் என்று மூத்த முஸ்லிம் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில், ஜமாத்-இ-உலமா-இ-ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலாளர் மெகமூத் மதானி பேசியது:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் மக்களிடம் பீதியை ஏற்படுத்தி வாக்கு வேட்டையாடுகின்றன. பல்வேறு மாநிலக் கட்சிகளும் இதே கொள்கையைக் கடைப்பிடிக்கின்றன.
மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டுமென்றால் இதுவரை செய்த சாதனைகள், வாக்குறுதிகளின் அடிப்படையில் மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் என்னென்ன செய்துள்ளோம், எதெல்லாம் விடுபட்டுள்ளன என்பதை அளவிட்டு அதற்கேற்ப செயல்படலாம். அதைவிடுத்து மோடியை முன்நிறுத்தி தேவையில்லாமல் பீதியை ஏற்படுத்தக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் மதரஸாக்களுக்கு மானியம் அளிப்பதை தவிர்த்து முஸ்லிம்களுக்காக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை அமைக்கலாம்.
மத்தியில் ஆளும் காங்கிரஸும், ராஜஸ் தானில் ஆளும் காங் கிரஸ் அரசும்கூட முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவில்லை. இது தொடர்பாக முஸ்லிம் களுக்கு அளித்த வாக்குறுதி இப்போதும் வாக்குறுதியாகவே இருக்கிறது. முஸ்லிம்கள் இந்த நாட்டின் பங்கு தாரர்கள். வாடகை குடி யிருப்புவாசிகள் அல்ல.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுகூட முஸ்லிம் களை படுகொலை செய்திருக்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார். மக்களவைத் தேர்தலையொட்டி மோடியின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த மதானி, “நான் இப்போது மோடியைப் பற்றி பேசவில்லை. முஸ்லிம்களின் ஓட்டுகளைப் பெற மதச்சார்பற்ற கட்சிககள் எவ்வாறு வலைவிரிக்கின்றன என்பது குறித்து மட்டுமே பேசுகிறேன்” என்றார்.
பாஜக குற்றச்சாட்டு
மூத்த முஸ்லிம் மதத் தலைவரான மெகமூத் மதானியின் பேச்சு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சை மேற்கோள் காட்டி பாஜகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளும் காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளன.
பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியது:
“காங்கிரஸ் கட்சி, ஓட்டுக்காக மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறது என்பது இப்போது அனைவருக்கும் தெளிவாகப் புரிந்திருக்கும். வாக்காளர்களை அச்சுறுத்தியே காங்கிரஸ் ஓட்டு வேட்டையாடுகிறது. இதை பாமர மக்களும் படிப்படியாகப் புரிந்து கொள்வார்கள். விலைவாசி உயர்வு, ஊழல் விவகாரங்கள் மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்துதான் மக்கள் கவலைப்படுகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
மற்றொரு பாஜக தலைவர் சித்தார்த் நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் கையாண்டு வருகிறது, இந்து- முஸ்லிம் சகோதரர்களுக்கு இடையே அந்தக் கட்சி குழப்பத்தை ஏற்படுத்துகிறது” என்று குற்றம் சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியது:
“எந்தவகையிலும் மதரீதியாக அரசியல் ஆதாயம் தேடுவது முற்றிலும் தவறான நடவடிக்கை. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நமது நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கை, ஜனநாயக மரபுகளை அனைத்து தரப்பினரும் கட்டிக் காப்பாற்ற வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
யார் இந்த மதானி?
ஜமாத்-இ-உலமா-இ-ஹிந்த் அமைப்பின் பொதுச் செயலாளர் மெகமூத் மதானி ஏற்கனவே நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குஜராத் சட்டமன்றத் தேர்தலின்போது, மோடிக்கு ஆதரவாகவே முஸ்லிம்கள் வாக்களித்தனர், மகாராஷ்டிரம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களைவிட குஜராத்தில் முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT