Published : 24 Nov 2013 05:48 PM
Last Updated : 24 Nov 2013 05:48 PM

பிரதமர் எச்சரிக்கை எதிரொலி: எல்லையில் படைகள் குவிப்பு

எல்லையில் தீவிரவாத ஊடுருவலை முறியடிக்க கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்வதாக பிரதமர் நேற்று(சனிக்கிழமை) எச்சரித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2014- ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையும், 5 மாநில சட்டசபை தேர்தல்களையும் சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும், எனவே கூடுதல் கண்காணிப்பு தேவை எனவும் டெல்லியில் காவல்துறை மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாடு கோட்டின் அருகில் பாதுகாப்புக்காக கூடுதலாக இந்தியப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்: பொதுவாக குளிர்காலங்களில் இந்தியாவுக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் அதிக முயற்சி எடுப்பது வழக்கம். இந்த முறை பனிப்பொழிவு சற்று குறைவாக இருப்பதால் இது தீவிரவாதிகளுக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருக்கிறது. எனவே தீவிரவாதிகள் ஊடுருவலை முறியடிக்கும் வகையில் எல்லையில் கூடுதலாக படைகளை குவித்து வருகிறோம். குளிர் காலத்தை பயன்படுத்தி ஏராளமான தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ உள்ளனர் என உளவுத்துறையும் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இந்த ஆண்டு இந்திய எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் இதுவரை மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஊடுருவ முயன்ற 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.இந்நிலையில், தேர்தல்களை சீர்குலைக்கும் வகையில், தற்போது ஊடுருவ தயாராகி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

தீவிரவாதிகளில் முக்கிய கமாண்டர்கள் பலர் கொல்லப்பட்டனர், சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தங்கள் இயக்கங்களை வலுப்படுத்த வேண்டும் என்று தீவிரவாத கும்பல்கள் செயல்பட்டுவருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. தலைவர்கள் இல்லாமல் தீவிரவாதிகள் நம்பிக்கை இழந்து காணப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது என்றார்.

தீவிரவாதிகள் அழிப்பு வேட்டையில் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை குறிப்பிடத்தக்க உதவிகளை செய்து வருவதாக, அந்த அதிகாரி பாராட்டும் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்குள்ளேயெ பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை அடையாளம் கண்டு அழிப்பது தான் மிகப் பெரிய சவாலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x