Published : 09 Nov 2013 09:00 AM
Last Updated : 09 Nov 2013 09:00 AM
காங்கிரஸ் கட்சியின் சத்தீஸ்கர் மாநில தலைவர் நந்த குமார் படேல் முதல்வர் பதவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நக்ஸல்களால் கொலை செய்யப்பட்டார். இது காங்கிரஸின் மீதான தாக்குதல் அல்ல. ஏழை மக்களின் மீதான தாக்குதல் என தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். ராஜ்நந்த்கான் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கடந்த மே 25 ஆம் தேதி மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப்பட்டனர். மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல் முதல்வர் ஆவதை யாராலும் தடுத்திருக்க முடியாது. அவரைத் தடுப்பதற்கு வழியே இல்லை. ஆகவேதான் அவர் கொல்லப்பட்டார்.பழங்குடியினர் மற்றும் பெண்களின் குரலை அவர் தன் இதயத்திலிருந்து பிரதிபலித்தார். காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர். ஆனால், ஆளும் பாஜக அரசு தம்மீது தவறில்லை என்கிறது. இது காங்கிரஸ் கட்சியின் மீதான தாக்குதல் அல்ல; மக்களின் மீதான தாக்குதல், பழங்குடியினர் மற்றும் பெண்களின் மீதான தாக்குதல். இந்த நிகழ்ச்சியை மக்கள் மறந்து விடக்கூடாது. காங்கிரஸை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும்.
நீரும் நிலமும் வனமும் உங்களுடையவை (பழங்குடியினர்). நீங்கள்தான் அவற்றைப் பாதுகாத்து வருகிறீர்கள். இந்த மாநிலம் உங்களுடையது. ஏழை மக்களிடம் இருந்து 6 லட்சம் ஏக்கர் நிலம் பாஜகவினரால் பறிக்கப்பட்டு தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்த நிலங்கள் உங்களுக்குத் திருப்பித் தரப்படும். நீங்கள் நிலத்தை சில தொழிலதிபர்களுக்குத் தர விரும்பினால், நீங்கள் கொடுக்கலாம். ஆனால், அது உங்களின் முடிவு.
வறுமையையும் ஏழ்மையையும் ஒழிக்க வேண்டும் என காங்கிரஸ் கருதுகிறது. பெண்கள் மற்றும் இளைஞர்களின் கையில் அதிகாரம் அளிக்க வேண்டும் என நினைக்கிறோம். நாங்கள் உங்களுக்கு அதிகாரம் வழங்குகிறோம்.
ஏழை மக்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படாதவரை அவர்களின் பிரச்னைகள் தீராது.
ஆனால், பாஜகவின் ஆட்சியில் முழு அதிகாரமும் முதல்வரின் கையில்தான் இருக்கிறது. இதுதான் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இருக்கும் வேறுபாடு.
பாஜக ஊழலில் உலக சாம்பியன். அவர்கள் வெறும்பேச்சுக்காரர்கள். அக்கட்சியின் ஆட்சியில் வளர்ச்சி என்பது சில தனிப்பட்டவர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது; மக்களுக்கு அல்ல. ஆனால், மக்களை வளர்ச்சியடைய வைப்பதுதான் காங்கிரஸின் நோக்கம். இவ்வாறு ராகுல் பேசினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மே 25 ஆம் தேதி பரிவர்தன் பேரணியில் பங்கேற்று விட்டுத் திரும்பிய காங்கிரஸ்காரர்கள் மீது ஜக்தல்பூர் மாவட்டத்தில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் அக்கட்சியின் மூத்த தலைவர் மகேந்திர கர்மா, முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி. சுக்லா, மாநில தலைவர் நந்த குமார் படேல், முன்னாள் எம்எல்ஏ உதயா உள்பட ஏராளமான காங்கிரஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தைக் கூறி அனுதாப வாக்குகளைப் பெறும் வகையில் ராகுல்காந்தியின் பிரசார வியூகம் அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள்
கருதுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT