Published : 18 Jun 2017 10:44 AM
Last Updated : 18 Jun 2017 10:44 AM
கர்நாடகாவில் தேவதாசியாக கோயி லுக்கு நேர்ந்து விடப்பட்ட 10 வயது தலித் சிறுமியை அதிகாரிகள் மீட்டுள்ள னர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு இச்சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம், குல்பர்கா மாவட் டம், சித்தாப்பூர் என்ற கிராமத்தில் தலித் சிறுமி தேவதாசி முறைக்குள் தள்ளப் பட்டுள்ளதாக அம்மாநில குழந்தைகள் நலக் குழுவுக்கு நேற்று முன்தினம் ரகசியத் தகவல் கிடைத்தது. குழந்தை கள் நலக்குழு உறுப்பினர் விட்டல் சிக்கானி மற்றும் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.
அங்குள்ள சமவா கோயிலுக்கு தலித் சிறுமி ஒருவர் 5 வயதில் நேர்ந்து விடப்பட்டதும், தற்போது 10 வயதாகும் அச்சிறுமி, பூசாரி சரணப்பா வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அச்சிறுமியை அதிகாரிகள் மீட்டு, குல்பர்காவில் உள்ள மகளிர் நல விடுதியில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, குற்ற வாளிகளை தண்டிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனர்.
இதுகுறித்து கர்நாடக குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் விட்டல் சிக்கானி கூறும்போது, “அச்சிறுமியின் பெற்றோரிடம் பேசினோம். சிறுமிக்கு ஆஸ்துமா நோய் ஏற்பட்டதால் பூசாரி கூறியதன் பேரில் கோயிலுக்கு தேவதாசியாக நேர்ந்துவிட்டுள்ளனர். தங்கள் மகளுக்கு 5 வயது இருக்கும் போது மங்கள சூத்ரா சடங்கு முடித்து விட்டு, பூசாரியிடம் தேவதாசியாக அனுப்பியதாக கூறினர்” என்றார்.
குழந்தைகள் நலக்குழுவிடம் பூசாரி சரணப்பா கூறும்போது, “எங்கள் கோயிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேவதாசி முறை வழக்கத்தில் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலித் சிறுமிகளை தேவதாசி முறையில் ஈடுபடுத்தியுள்ளோம். அந்தப் பெண்கள் இப்போதும் கோயில் பூசாரிகளுடனும், சாதி இந்து நில உடைமையாளர்களிடமும் தேவதாசியாக சேவை செய்து வருகின்றனர். இது இந்து மத சடங்காக பின்பற்றப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குல்பர்கா மாவட்ட ஆட்சியர் உஜ்வால் குமார் கோஷ் கூறும்போது, “சிறுமி நேர்ந்து விடப்பட்ட விவரம் கிராம மக்களுக்கும், அங்குள்ள ஆசிரியர்களுக்கும் தெரிந்துள்ளது. இருப்பினும் அரசுக்கு அதனை தெரிவிக்காமல் இருந்துள்ளனர். எனவே பூசாரி சரணப்பா, சிறுமியின் பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் இருவர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். இதில் சரணப்பா கைது செய்யப்பட்டு, குல்பர்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சிறுமியை வெளியூர் அரசு சிறார் இல்லத்திலோ, வெளி மாவட்ட உண்டு உறைவிட பள்ளியிலோ சேர்க்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.
குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் விட்டல் சிக்கானி மேலும் கூறும்போது, “மனித உரிமைக்கும், மகளிர் நலனுக்கும் எதிரான தேவதாசி முறை கர்நாடகாவில் 1982-ம் ஆண்டு முழுமையாக தடை செய்யப்பட்டது. இருப்பினும் கர்நாடகாவில் சுமார் 10 ஆயிரம் தலித் பெண் குழந்தைகள் தேவதாசி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. குல்பர்கா மாவட்டத்தில் மட்டும் 3,600 பேர் இன்னும் தேவதாசி முறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்றார்.
கர்நாடகாவில் தேவதாசி முறை 1982-ம் ஆண்டு முழுமையாக தடை செய்யப்பட்டது. இருப்பினும் சுமார் 10 ஆயிரம் தலித் பெண் குழந்தைகள் தேவதாசி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT