Published : 01 Nov 2013 11:40 AM
Last Updated : 01 Nov 2013 11:40 AM

ஹிட்லரைப் போலவே மோடியும் பாசிசவாதி: திவாரி தாக்கு

ஹிட்லரைப் போலவே நரேந்திர மோடியும் பாசிசவாதி என மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி விமர்சித்துள்ளார்.



அவர் தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: 1933 ஜனவரி 30 ஆம் தேதி ஜெர்மன் சான்ஸலராக (பிரதமர்) ஹிட்லர் பொறுப்பேற்றார். பிப்ரவரி 27ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கொளுத்திவிட்டார்.

பாசிசம் பேசுவது, அதனைச் செயல்படுத்துவதற்கான கட்டியம் கூறுவதாகும் நிதீஷ்ஜி. வரலாற்றின் முரண்பாடான பக்கத்தைப் பார்த்தால், சர்வாதிகாரிகள் ஜனநாயக வழியில் ஆட்சியைப் பிடிக்கின்றனர். பின்னர் நிலைமையைத் தலைகீழாக மாற்றி விடுகின்றனர். பெரும் சாத்தான் நம் நாட்டைப் பீடித்திருக்கிறது என்று திவாரி தெரிவித்துள்ளார்.

படேல் சிலைக்காக விவசாய நிலம் அபகரிப்பு - திக்விஜய் சிங் புகார்

இதனிடையே, சர்தார் படேல் சிலை அமைப்பதற்காக பாசிச முறைகளைப் பயன்படுத்தி விவசாயிகளிடமிருந்து நிலங்கள் அபகரிக் கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய பிரதேசம் ரகோகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நர்மதை நதிக்கரையில் படேல் சிலை அமைப்பதற்காக விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாசிச வழிமுறைகளை மோடி கையாண்டுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நர்மதா பாதுகாப்பு இயக்கத் தலைவரும் சமூக சேவகருமான மேதா பட்கரும் குஜராத் வந்துள்ளார் என்று தெரிவித்தார். பாஜக இருந்திருக்காது...

முன்னதாக அவர் அளித்த பேட்டியில் கூறியது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தவர் படேல். அதை நரேந்திர மோடி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜவஹர்லால் நேருவுக்குப் பதிலாக இரும்பு மனிதர் படேல் பிரதமர் ஆகியிருந்தால் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும் என்றார்.

மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகளில் கூறப்படுவது குறித்து கேட்டபோது, அந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசியெறிய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x