Last Updated : 30 Mar, 2014 01:17 PM

 

Published : 30 Mar 2014 01:17 PM
Last Updated : 30 Mar 2014 01:17 PM

மோடி, அத்வானி, எடியூரப்பா பா.ஜ.க.வில் இருக்கலாம், நான் இருக்கக் கூடாதா?: பா.ஜ.க.வில் இருந்து நீக்க‌ப்பட்ட பிரமோத் முத்தாலிக் ஆவேசம்

கடந்த 2009-ம் ஆண்டில் மங்களூரில் கேளிக்கை விடுதியில் தொண்டர்களுடன் புகுந்து பெண்களைத் தாக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் ‘ஸ்ரீராம் சேனா'வின் தலைவர் பிரமோத் முத்தாலிக். பூங்கா விலும், ஷாப்பிங் மாலிலும் இருந்த காதலர்களுக்கு வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்து வைத்து மீடியாக்களில் பிரபலமானார்.

தீவிர இந்துத்துவா கருத்துகளை பேசிவந்த பிரமோத் முத்தாலிக் சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வில் சேர்ந்தார். அடுத்த ஐந்தே மணி நேரத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கியது பா.ஜ.க. தலைமை. இதுதொடர்பாக பிரமோத் முத்தாலிக்கை பெங்களூரில் ‘தி இந்து' சார்பாக சந்தித்தோம்.

ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவராக இருக்கும் நீங்கள் ஏன் திடீரென பா.ஜ.க.வில் இணைந்தீர்கள்?

60 ஆண்டு கால பழம்பெருமையுள்ள‌ ஸ்ரீராம் சேனையின் தலைவராக இருந்த என்னை சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் பிரஹலாத் ஜோஷி சந்தித்தார். கர்நாடகாவில் 28 தொகுதிகளில் வென்று நரேந்திர மோடியை எப்படியாவது பிரதமராக்க வேண்டும். நாம் தனித்தனியாக இருந்தால் இந்துக்களின் வாக்குகள் பிரிந்து,எதிரிகள் ஜெயித்து விடுவார்கள். அதனால் பா.ஜ.க.வில் இணைந்து தேர்தலில் போட்டியிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனால் எனது தொண்டர்களைக் கூட கேட்காமல் பா.ஜ.க.வில் இணைந்தேன்.இப்போது அதற்காக வருத்தப்படுகிறேன்

பா.ஜ.க. மேலிடம் உங்களை எதற்காக கட்சியில் இருந்து விலக்கியது?

கெஞ்சி கூத்தாடி என்னை பா.ஜ.க.வில் சேர்த்தவர்கள், விலக்கியதற்கு எந்த காரணமும் சொல்லவில்லை.கட்சியில் இருந்து விலக்கியதற்காக சில கர்நாடக பா.ஜ.க. தலைவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டனர். கட்சி மேலிடத்தை தாண்டி, தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றனர். கர்நாடகாவை சேர்ந்த‌ பா.ஜ.க.தலைவர்கள் பாவம். அவர்கள் ராஜ்நாத் சிங்கிற்கும் மோடிக்கும் அத்வானிக்கும் அனந்தகுமாருக்கும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பிற்கும் அடிமைகளாக இருக்கிறார்கள்.

நான் சாதாரணமானவன். இந்துக்களுக் காக போலீஸிடம் அடி, உதை வாங்கி சிறை தண்டனை அனுபவித்தவன். நான் அவர்களை போல கொலை செய்தேனா? கொள்ளை அடித்தேனா? என்னை நீக்கிய தற்கு அவர்கள் கண்டிப்பாக பதில் சொல்லியே தீர வேண்டும்.

அப்படியென்றால் நீங்கள் எதற்காக பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்டீர்கள்? உங்கள் மீது கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வழக்குகள் இருப்பதாலே நீக்கியதாக செய்திகள் வெளியாகி இருக்கிறதே?

நானும் அதையெல்லாம் கேள்விப் பட்டேன். இந்துக்களுக்காக போராடிவரும் என் மீது பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கோபமாக இருப்பதை நினைத் தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய இளமை காலத்தில் நான் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் பணியாற்றியவன். சங் பரிவார் அமைப்பில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவன். இந்து மதத்தின் நலனுக்காகவும் இந்துஸ்தானின் நலனுக்காகவும் போராடியதையெல்லாம் அவர்கள் குற்றமாக பார்க்கிறார்கள். என்னை பொறுத்தவரை அவர்கள்தான் குற்றவாளிகள்.

போலீஸும்,காங்கிரஸும் என்னை ஒழிக்க திட்டமிட்டார்கள். அனந்தகுமார் போன்றவர்கள் அந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றதாக நரேந்திர மோடி மீது வழக்கு இருக்கிறது. பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக எடியூரப்பா மீது வழக்கு இருக்கிறது. பாபர் மசூதியை இடித்ததாக அத்வானி மீது கூட வழக்கு இருந்தது. அவர்கள் எல்லாம் பா.ஜ.க.வில் இருக்கலாம். நான் இருக்கக் கூடாதா? எனவே தான், பா.ஜ.க.வினரிடம் இருந்து இந்து மதத்தையும் இந்துஸ்தானையும் காப்பாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.

என்ன முயற்சி?

என்னையும் ஸ்ரீராம் சேனாவையும் அவமானப்படுத்திய பா.ஜ.க.விற்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப் போகிறேன்.

பெங்களூர் தெற்கு தொகுதியில் பா.ஜ.க.வின் சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அனந்த குமாரை எதிர்த்துப் போட்டியிட போகிறேன். அதேபோல என்னை பா.ஜ.க.வில் சேர்த்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் பிரஹலாத் ஜோஷியை எதிர்த்து தார்வார் தொகுதியிலும் நானே நேரடியாக களத்தில் குதித்திருக்கிறேன். அதேபோல முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்த கவுடா போட்டியிடும் தொகுதிகளிலும் மேலும் சில தொகுதிகளிலும் பா.ஜ.க.வை எதிர்த்து எங்களது கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிடுகிறார்கள்

எடியூரப்பா, அனந்தகுமார் ஆகியோரை எதிர்த்து தேர்தலில் வெற்றிபெற முடியும் என நம்புகிறீர்களா?

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். நான் வெற்றி பெற முடியாவிட்டாலும் அனந்த குமாரையும் பிரஹலாத் ஜோஷியையும் நிச்சயம் வீழ்த்துவேன்

பா.ஜ.க. தரப்பில் உங்களை சமரசம் செய்தால் மீண்டும் அவர்களோடு கைகோப்பீர்களா?

இல்லை. இனி அவர்களே வந்து காலில் விழுந்து கெஞ்சினால்கூட சேரமாட்டேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x