Published : 30 Oct 2013 04:56 AM Last Updated : 30 Oct 2013 04:56 AM
பாட்னா மைதானத்தில் வெடிக்காத 3 குண்டுகள் கண்டுபிடிப்பு
பாட்னா பீகார் தலைநகர் பாட்னா காந்தி மைதானத்தில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இரு நாள்களுக்குப் பின்னர் அங்கு மேலும் 3 வெடிகுண்டுகள் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.
பாட்னா காந்தி மைதானத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளும் பீகார் போலீஸாரும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை காலையில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பொருள் கிடப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அதை எடுத்துப் பார்த்தபோது சக்திவாய்ந்த வெடிகுண்டு என்பது தெரியவந்தது. உடனடியாக அந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் அடுத்தடுத்து மேலும் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிக சக்திவாய்ந்த அந்த வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.
இந்தத் தகவலை பாட்னா எஸ்.பி. ஜெயந்த் காந்த் உறுதி செய்தார். சிபிஐ (எம்.எல்.) சார்பில் காந்தி மைதானத்தில் புதன்கிழமை பொதுக்கூட்டம் நடத்த முன்னரே திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு புதிதாக வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியில், காந்தி மைதானத்தில் சிபிஐ (எம்.எல்.) பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுமா என்று எஸ்.பி. ஜெயந்த் காந்திடம் கேட்டபோது, இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.
WRITE A COMMENT