Published : 13 Nov 2013 03:58 PM
Last Updated : 13 Nov 2013 03:58 PM

ரத்தக்கறை படிந்த கை: மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

'ரத்தக்கறை படிந்த கை' என்ற சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக, குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் இன்று (புதன்கிழமை) அனுப்பியது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக உங்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டுள்ள தேர்தல் ஆணையம், அது குறித்து நவம்பர் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை அவமதிக்கும் வகையில் ரத்தக்கறை படிந்த கை, கொடுமை செய்யும் கரம் என்று பேசிய நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்திடம் காங்கிரஸ் புகார் அளித்திருந்தது.

சமீபத்தில் சத்தீஸ்கரில் நடைபெற்ற கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுகையில், "ரத்தக்கறை படிந்த கையின் நிழல் சத்தீஸ்கரின் மீது விழக்கூடாது என நீங்கள் விரும்பினால், தாமரை (பாஜக) சின்னத்துக்கு வாக்களியுங்கள். தவறுதலாகக் கூட சத்தீஸ்கரை கொடுமை செய்யும் கரங்கள் வசம் சிக்க வைத்துவிடாதீர்கள்" என்று கூறியிருந்தார்.

இதைக் கண்டித்து தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் அளித்துள்ள புகாரில், காங்கிரஸின் கை சின்னம் குறித்து வரம்பு கடந்த வகையிலும், கெடுதல் ஏற்படுத்தும் நோக்கத்துடனும், அவதூறாகவும் நரேந்திர மோடி விமர்சித்து வருகிறார். ரத்தக்கறை படிந்த கை என்றும், கொடுமை செய்யும் கரம் என்றும் அவர் கூறியுள்ளார். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. காங்கிரஸ் குறித்து மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் முயற்சியாகவே இதை நாங்கள் கருதுகிறோம்.

உள்நோக்கத்துடன் மோசமான வார்த்தைகளை மோடி பயன்படுத்தியுள்ளார். ஒரு கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள், கடந்த காலங்களில் அவர்களின் செயல்பாடு ஆகியவற்றை முன்வைத்து விமர்சிக்க தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது. ஆனால், மோடியின் பேச்சு அவதூறாக உள்ளது. மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது. அவரின் பேச்சு தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக நாடு முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக, அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

முன்னதாக, முஸாபர்நகர் முஸ்லிம்களுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொண்டுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பாஜக அளித்த புகாரின் பேரில், ராகுல் காந்தியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியிருந்தது. அதற்கு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதையும் தான் மீறவில்லை என்று ராகுல் காந்தி பதில் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x