Published : 12 Nov 2013 08:16 AM Last Updated : 12 Nov 2013 08:16 AM
கொள்கை முடிவெடுப்பதில் தவறிழைப்பது கிரிமினல் குற்றம் அல்ல: பிரதமர்
கொள்கை முடிவெடுப்பதில் தவறிழைப் பது கிரிமினல் குற்றம் ஆகாது. இதை புலனாய்வு அமைப்புகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
சிபிஐ சார்பில் நடத்தப்படும் 3 நாள் ஊழல் தடுப்பு கருத்தரங்கம் டெல்லியில் திங்கள்கிழமை தொடங்கியது. அதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர், நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கை மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.
புலனாய்வு அமைப்புகள் அரசின் கொள்கை முடிவுகளை அலசி ஆராய்ந்து தீர்மானிக்கக் கூடாது, இதனால் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதில் அரசு அதிகாரிகளுக்கு தேவையில்லாத அச்ச உணர்வு ஏற்படுகிறது என்று சிபிஐ அதிகாரிகளுக்கு அவர் சூசகமாக உணர்த்தினார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக அத்துறையின் முன்னாள் செயலர் பி.சி. பரேக், ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. முறைகேடு நடைபெற்ற காலத்தில் நிலக்கரித் துறை பொறுப்பு வகித்த பிரதமர் மன்மோகன் சிங் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கொள்கை வரையறுப்பு கடினம்...
இந்த விவகாரத்தை சுட்டிக் காட்டி பிரதமர் மன்மோகன் சிங் பேசியது: நிலையற்றத்தன்மை நிலவும் இந்த நேரத்தில், அரசின் கொள்கைகளை வகுப்பது மிகவும் கடினம். ஒவ்வொரு கொள்கையையும் வரையறுப்பது பல அடுக்குகள் கொண்ட நடைமுறை.
இந்த கொள்கை முடிவுகளை புலனாய்வு விசாரணை அமைப்புகள் அலசி ஆராய்வது சரியான நடவடிக்கை அல்ல. அரசு நிர்வாகத்தில் சில நேரங்களில் தவறுகள் ஏற்படலாம். அதற்காக ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் எந்நேரமும் குறைகூறிக் கொண்டே இருக்கக்கூடாது. அரசின் பல்வேறு சாதனைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு கொள்கையை தீர்மானிக்கும் போது தவறுகள் ஏற்படுவது இயற்கை, அவற்றை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது. இரண்டும் வெவ்வேறு விவகாரங்கள். இதை புலனாய்வு அமைப்புகள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அரசு நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவுகள் குறித்து விசாரணை நடத்தும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற சிக்க லான விவகாரங்கள் ஊடகங்களின் நீண்ட நெடிய விமர்சனங்களுக்கு வழிவகுத்து விடுகின்றன.
நம்பகத்தன்மை அவசியம்...
கடமை தவறாத விசாரணை அமைப்புகள், நேர்மையான அரசு நிர்வாகம் என இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று நம்பகத் தன்மையுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் கொள்கை முடிவுகளை எடுக்கும்போது அரசு அதிகாரிகள் நிலைதடுமாறாமல் இருக்க முடியும்.
இப்போதைய நிலையில் விசாரணை அமைப்புகளின் பல்வேறு வழக்குகளால் அரசு அதிகாரிகள் மத்தியில் இனம்புரியாத அச்சம் நிலவுகிறது. அதற்காக தவறுகளைக் கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டும் என்று நான் கூறவில்லை. ஊழலுக்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தால் அது கண்டிப்பாகத் தட்டிக் கேட்கப்பட வேண்டும். அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
சிபிஐ-க்கு முழு சுதந்திரம்...
விசாரணை அமைப்புகளுக்கு ஏற்கனவே முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இன்னமும் வெளிசக்திகள் விசாரணைகளில் குறுக்கிடுவதாகப் புகார் எழுந்தால், என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். வழக்கு விசாரணையின் நம்பகத் தன்மை, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து சிபிஐ-க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
'சிபிஐயின் சட்டப்பூர்வத் தன்மை நிலைநாட்டப்படும்'
சிபிஐ சட்டப்பூர்வமான அமைப்பு என்பது நிலைநாட்டப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக சிபிஐ கருத்தரங்கில் அவர் பேசியது: சிபிஐ அமைப்பை யும் அதன் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் நிலைநாட்ட மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீவிரமாகவும் மிக விரைவாகவும் செயல்பட்டு வருகிறது.
சிபிஐ-யின் கடந்த காலமும் எதிர்க்காலமும் நிச்சயமாகப் பாதுகாக்கப்படும் என்றார். குவாஹாட்டி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அளித்த தீர்ப்பில், சிபிஐ அமைப்பு சட்டப்பூர்வமற்றது என்று தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, குவாஹாட்டி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதித்தது.
WRITE A COMMENT