Published : 28 Jun 2017 09:58 AM
Last Updated : 28 Jun 2017 09:58 AM

உ.பி. புந்தேல்கண்ட் பகுதியில் குளம், கிணறுகளை தூர்வாரும் ‘நீர்த்தோழிகள்’ பெண்கள் அமைப்பு

உ.பி.யில் அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படும் புந்தேல்கண்ட் பகுதியில் ‘நீர்த்தோழிகள்’ என்ற பெண்கள் அமைப்பு பெரும் சேவை புரிந்து வருகிறது. குளம், கிணறுகளை தூர்வாருதல், கைபம்புகளை சரி செய்தல் போன்ற பணிகளால் இந்த அமைப்பு மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

ம.பி.யின் 6 மாவட்டங்கள் மற்றும் உ.பி.யின் 7 மாவட்டங்கள் என 13 மாவட்டங்களில் புந்தேல் கண்ட் பரவியுள்ளது. வறட்சிக்கும் விவசாயிகள் தற்கொலைக்கும் இப்பகுதி பெயர் பெற்றதாக உள்ளது. இங்கு நீர்த்தோழிகள் (ஜல் சஹேலிஸ்) என்ற பெண்கள் அமைப்பு தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதில் சாதனை புரிந்து வருகிறது.

உ.பி.யின் புந்தேல்கண்ட் மாவட்டங்களில் ஒன்றான ஜலோனில் ‘பர்மர்த் சமாஜ் சேவி சன்ஸ்தான்’ என்ற சமூகசேவை அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் புந்தேல்கண்ட் கிராமங்களில் பெண்களை தேர்வு செய்து நீர்த்தோழிகள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பெண்கள் உதவியுடன் குளம் மற்றும் கிணறுகளை தூர்வாரி வருகின்றனர். இதனால் மழைநீர் சேமிக்கப்பட்டு கால்நடை வளர்ப்பவர்களும் விவசாயிகளும் பலனடைந்து வருகின்றனர். இப்பெண்கள் பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ள கைபம்புகளையும் சீரமைத்து வருகின்றனர்.

சந்திரபூர் என்ற கிராமத்தில் இரு ஏக்கரில் அமைந்துள்ள குளத்தை இந்த அமைப்பினர் முதலாவதாக தூர்வாரி, அதில் மழைநீர் சேமிக்கச் செய்தனர். இதில் கிடைத்த பலனால் நீர்த்தோழிகளின் பணி அதை சுற்றியுள்ள சுமார் 150 கிராமங்களுக்கும் பரவியுள்ளது.

இது குறித்து நீர்த்தோழிகள் அமைப்பின் முக்கிய நிர்வாகியான புஷ்பா விஸ்வகர்மா (35), ‘தி இந்து’விடம் கூறும்போது, “புந்தேல்கண்ட் தண்ணீர் பிரச்சினையை மத்திய அரசும், உ.பி. அரசும் செவிமடுப்பதில்லை. எனவே இங்கு 2011-ல் கூட்டப்பட்ட பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட முடிவில் அடிப்படையில் நீர்த் தோழிகள் அமைப்பு உருவாக்கப் பட்டது. இதற்கு பரமர்த் சமாஜ் சேவி சன்ஸ்தானின் நிறுவனரான சஞ்சய் சிங் எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளார். நிலத்தடி நீருக்காக ஆறுகளில் பல தடுப்பணைகள் கட்டவும் நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.

காய்கறி பயிர்செய்வது புந்தேல்கண்ட் விவசாயிகளுக்கு கனவாகவே இருந்து வந்தது. இப்போது நீர்த்தோழிகளின் அரிய பணியால் விவசாயிகள் பலர் காய்கறி பயிர் செய்ய முன்வந்துள்ளனர். ஜலோன், லலித்பூர், ஜான்சி, ஹமீர்பூர் ஆகிய மாவட்டங்களில் நீர்த்தோழிகள் சேவை புரிந்து வருகின்றனர். இவர்களின் பாராட்டுக்குரிய செயலால், ம.பி. மாநிலத்தின் டீக்கம்கர், சத்தர்பூர் ஆகிய மாவட்டங்களிலும் நீர்த்தோழி குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து நிதியுதவி கிடைத்து வந்தது. இந்த உதவியை தற்போது நபார்டு வங்கி செய்து வருகிறது. நீர்த்தோழிகள் அடுத்த முயற்சியாக கழிவறைகள் மற்றும் சுகாதார மையங்கள் அமைப்பதில் இறங்க உள்ளனர். இதற்காக, மத்திய, மாநில அரசு அதிகாரிகளை சந்தித்து, அவர்களை வற்புறுத்தி இப்பணியை செய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குலாபி கேங்

பெண்கள் குழுக்களின் செயல்பாடு புந்தேல்கண்ட் பகுதிக்கு புதிதல்ல. இங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ‘குலாபி கேங்’ என்ற பெண்கள் குழு உருவானது. ரோஸ் நிறச் சேலைகளுடன் கையில் கம்பு ஏந்திச் செல்லும் இக்குழுவினர், பெண்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கின்றனர்.

குடிகாரக் கணவன் தொல்லை, வரதட்சிணை கொடுமை, காதலர் களால் பெண்கள் கைவிடப்படுதல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இவர்கள் தலையிட்டு தீர்த்து வைக்கின்றனர். அரசு அலுவல கங்களில் மக்களுக்கு நலத் திட்ட உதவி கிடைத்திடவும் போராடுகின்றனர். உலகம் முழு வதும் பிரபலம் அடைந்த இந்த குலாபி கேங்கின் நிறுவனர் சம்பத் பால் (56). இவரது கதை சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் திரைப்படமாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x