Published : 18 Nov 2013 05:07 PM
Last Updated : 18 Nov 2013 05:07 PM
'ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவை மற்றும் பிரதமர் பதவியை ராகுல் காந்தி அவமதித்ததை முதலில் கவனியுங்கள்' என்று மன்மோகன் சிங் குற்றச்சாட்டுக்கு நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் ஜபல்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை கடுமையாக சாடினார்.
"பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர்களை அவதூறாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். அதற்காக வரலாற்று உண்மைகளை திரிக்கிறார். பல்வேறு பொய்களைப் புனைந்து பேசுகிறார். குஜராத் வளர்ச்சியை முன்மாதிரியாகப் பின்பற்றுவோம் என்று பாஜக தலைவர்கள் தம்பட்டம் அடித்துப் பேசுகிறார்கள்" என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
பிரதமரின் இந்தப் பேச்சுக்கு பதில் தரும் வகையில், மத்தியப் பிரதேசத்தில் இன்று நடந்த பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, "பிரதமர் பதவி மீதான மதிப்பு ஏற்கெனவே சிதைக்கப்பட்டுவிட்டது. ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் அவமதித்தது யார்? ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் இழிவுபடுத்தியது யார்?
உங்களைப் பிரதமர் பதவியில் அமர்த்திய கட்சியால் பெருமைக்குரியர் எனக் கருதப்படுபவரும், கட்சியின் துணைத் தலைவருமாகவும் இருப்பவரே உங்கள் (பிரதமர் மன்மோகன் சிங்) முடிவை முட்டாள்தனமானது என்றார்.
பாஜகவின் எந்த உறுப்பினரும் இந்தப் பாவத்தை செய்யவில்லை. ஜனநாயகத்தில் எடுக்கப்பட்ட முடிவை கிழித்து எறிய வேண்டும் என்று கூறிய அவர் (ராகுல் காந்தி) தான் இழிவுபடுத்துவதற்குக் காரணமானவர். முகத்தில் அறைவதற்கு ஒப்பான செயல் அது" என்றார் நரேந்தி மோடி.
குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் அரசியல்வாதிகளைக் காக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு எதிராக குரல் கொடுத்த ராகுல் காந்தி, அந்த அவசரச் சட்டத்தை முட்டாள்தனமானது என்றும், அதைக் கிழித்து எறிய வேண்டும் என்றும் ஆவேசமாகப் பேசியிருந்தார். அதைச் சுட்டிக்காட்டியே மோடி இப்போது பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துப் பேசியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT