Last Updated : 30 Jun, 2017 08:26 AM

 

Published : 30 Jun 2017 08:26 AM
Last Updated : 30 Jun 2017 08:26 AM

ஜிஎஸ்டி அமலுக்காக இன்று நள்ளிரவு நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம்: காங்கிரஸ், இந்திய கம்யூ., திமுக புறக்கணிப்பு

ஜிஎஸ்டி வரி சீரமைப்பு முறையை அமல்படுத்த இன்று நள்ளிரவு கூடவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் புறக்கணித்துள்ளன.

ஜிஎஸ்டி தொடக்க நிகழ்வை புறக்கணிப்பது என திமுக சார்பில் முடிவெடுத்துள்ளோம் என்று அக்கட்சி யின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு கொள்கையை அமல்படுத்தும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. நாளை ஜூலை 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ள நிலையில் வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வைக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இன்று நள்ளிரவு நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துகொள் கிறார். பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார். இந்நிலையில் மத்திய அரசு அவசர கதியில் புதிய வரி விதிப்பு முறையை அமல் படுத்த முயல்வதாக கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் நாடாளுமன்றத் தின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது எனத் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி யின் மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான சத்யவிரத சதுர்வேதி கூறுகையில், ‘‘ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்காகக் கூடவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாது’’ என்றார்.

இதுபற்றி காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கூறும்போது, ‘‘ஜிஎஸ்டி கொள்கை காங்கிரஸ் பெற்ற குழந்தை. இதனை முழுவதுமாக பாஜக அபகரித்து விட்டது. மேலும் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றால் அவர்களுக்கு (பாஜக) மேலும் பலம் சேர்த்ததாக அமைந்து விடும். எனவே இந்தக் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என மூத்த தலைவர்கள் யோசனை கூறியதன்பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க அக்கட்சி யின் எம்.பி.க்கள் கூட்டம், கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி தலைமையில் நேற்று நடை பெற்றது.

இதன்பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘‘போதுமான காலஅவகாசம் தராமல் ஜிஎஸ்டியை அவசரமாக அமல்படுத்தும் நோக்கத் தில் மத்திய அரசு செயல்படுகிறது. புதிய வரிவிதிப்பு நடைமுறையில் பாதிப்புக்கு உள்ளாவோர் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க முன்வரவில்லை. இதனை மனதில் கொண்டுதான் ஜிஎஸ்டி அமலாக்க கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என முடிவெடுத்துள்ளோம்’’ என்றார்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அவர்களது கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இது பற்றி விரைவில் அவர்கள் அறிவிப் பார்கள் எனத் தெரிகிறது.

அருண் ஜேட்லி வேண்டுகோள்

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, ‘‘ஜிஎஸ்டியை அமல்படுத்த இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் முடிவை காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரிக் கொள்கை பற்றி அவர்களிடம் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டது. இதற்கு கட்சிகள் அனைத்தும் தோள் கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும். இது உங்களுடைய பொறுப்பாகும். எனவே இதிலிருந்து நீங்கள் விலகக் கூடாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x