Published : 22 Nov 2013 09:55 AM
Last Updated : 22 Nov 2013 09:55 AM

இந்திய முஜாகிதீனை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் தீவிரவாத சக்திகள்: சுஷீல் குமார் ஷிண்டே

இந்திய முஜாகிதீன் அமைப்பின் பின்புலத்தில் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாதச் சக்திகள் இருக்கின்றன. இந்த ஆண்டில் நிகழ்ந்த 4 பெரிய குண்டுவெடிப்புகளில் மூன்றில் இந்திய முஜாகிதீனுக்கு தொடர்புள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அனைத்து மாநில டி.ஜி.பி.க்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்கு உளவுத் துறை (ஐ.பி.) ஏற்பாடு செய்திருந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே பேசியதாவது:

“பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீய சக்திகளின் ஆதரவுடன் இந்திய முஜாகிதீன் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பினருக்கு, இந்தியாவில் இந்த ஆண்டு நிகழ்ந்த பெரிய அளவிலான 3 குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பு உள்ளது.

ஹைதராபாத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு, புத்த கயா, பாட்னாவில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு ஆகிய வற்றில் இந்திய முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். பெங்களூரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தொடர்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது (இவர்கள் அல்-உம்மாவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது).

இந்திய முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தலைவரான யாசின் பட்கல், அப்துல் கரீம் துன்டா ஆகியோரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளது பாராட்டுக்குரியது. மாநில போலீஸின் சிறப்புப் பிரிவுகளின் திறனை மேம்படுத்தத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும்.

பாரபட்சமற்ற நிர்வாக ரீதியான நடவடிக்கைகளின் மூலம் மத மோதலை தடுக்க முடியும். மத ரீதியான பிரச்சினைகளை பெரிய அளவில் உருவாகாதபடி முன்கூட்டியே எச்சரிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்த வேண்டும். வன்முறை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் ஊராட்சி நிர்வாகங்கள் அனைத்து சமூகத்தினரிடமும் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும்.

நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக துணை ராணுவப் படையினருக்கும் மாநில போலீஸாருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 70 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருப்பது, ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது கடந்த ஆண்டு 111 பாதுகாப்புப் படை வீரர்களும், 71 நக்ஸலைட்டுகளும் உயிரிழந்தனர். இந்த ஆண்டு 97 பாதுகாப்புப் படையினரும், 97 நக்ஸலைட்டுகளும் உயிரிழந்துள்ளனர்.

நக்ஸலைட்டுகளின் தலைவர் களை அழிப்பதிலும், அந்த அமைப்பில் புதிதாக யாரும் சேராமல் தடுப்பதிலும் மத்திய மாநில அரசுகளின் காவலர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். நக்ஸல் பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு துணை ராணுவப் படையினரை மத்திய அரசு அனுப்பி வைக்கும்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பஞ்சாயத்து தேர்தலில் வாக்களித்தனர். இது தீவிரவாதிகளுக்கான மக்களின் ஆதரவு குறைந்து வருவதையே காட்டுகிறது. அந்த மாநிலத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியா பொருளாதார ரீதியாக வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. அதனால், தொழில் கட்டமைப்பு மற்றும் கடற்கரையோர பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்றார் ஷிண்டே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x