Published : 10 Nov 2013 01:15 AM Last Updated : 10 Nov 2013 01:15 AM
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு
மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.
இதுகுறித்து லக்னௌவில் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறும்போது, "வரும் 2014 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிடாது. முழு ஏற்பாடுகளுடன் எங்கள் கட்சி தனித்தே போட்டியிடும்.
இதன்மூலம் காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா கட்சியுடன் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ எங்கள் கட்சி கூட்டணி வைக்கும் என்று வெளியாகும் தகவல் வெறும் வதந்தி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்கள் மத்தியில் எங்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற தகவலை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். சமாஜவாதி கட்சி தலைமையிலான உ.பி. அரசு, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் தவறி விட்டது. அரசியல் ஆதாயம் கருதி பாஜகவும், சமாஜவாதி கட்சியும் இணைந்து வகுப்பு மோதலைத் தூண்டி விடுகின்றன.
பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங் ஆகிய மூவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சுவதற்கு போட்டி போடுகின்றனர். இது எங்கள் கட்சிக்கு சாதகமாக அமையும்.
வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் எங்கள் கட்சி அதிக தொகுதிகளைக் கைப்பற்றி முதல் இடத்தைப் பிடிப்பதுடன் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. விரைவில் அங்கு பிரசாரம் மேற்கொள்வேன்" என்றார் மாயாவதி.
WRITE A COMMENT