Published : 09 Nov 2013 08:58 AM
Last Updated : 09 Nov 2013 08:58 AM
சிபிஐ சட்டபூர்வமற்ற அமைப்பு என்று குவாஹாட்டி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்கிறது.
பிரதமருடன் ஆலோசனை
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மன்மோகன் சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: குவாஹாட்டி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். 1963-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சிபிஐ உருவாக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிபிஐ சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.
இதே விவகாரம் குறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது: மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகத்தின் கீழ் சிபிஐ செயல்படுகிறது. குவாஹாட்டி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அந்த அமைச்சகம் மேல்முறையீடு செய்யத் தீர்மானித்துள்ளது என்றார்.
தீர்ப்பு தவறானது
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்ஹோத்ரா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, குவாஹாட்டி உயர் நீதிமன்றத் தீர்ப்பு தவறானது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.
சிபிஐ கருத்து
சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசியபோது, உயர் நீதிமன்ற தீர்ப்பால் இப்போது நடைபெறும் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படாது. தீர்ப்புக்கு எதிராக விரைவில் தடை ஆணை பெறப்படும் என்றார். சிபிஐ வட்டாரங்களில் விசாரித்த போது, உயர் நீதிமன்ற உத்தரவு நகலைப் பெற காத்திருக்கிறோம். அதனைப் பரிசீலித்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவை தெரிவித்தன.
தீர்ப்பு என்ன சொல்கிறது?
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் நவேந்திர குமார் தன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததை எதிர்த்து குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 1963-ல் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு மூலம் சிபிஐ உருவாக்கப்பட்டது, அந்த அமைப்புக்கு வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் இல்லை என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அன்சாரி, இந்திரா ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியிருப்பது: மத்திய உள்துறை அமைச்சகம் 1963 ஏப்ரல் 1-ல் நிறைவேற்றிய ஓர் தீர்மானத்தின் மூலம் சிபிஐ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் மத்திய அமைச்சரவையின் தீர்மானம் அல்ல. அந்தத் தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படவில்லை. எனவே சிபிஐ அமைப்பை போலீஸ் படையாகக் கருத முடியாது. அந்த அமைப்பு குற்ற வழக்குகளைப் பதிவு செய்வது சட்டவிரோதம். மத்திய உள்துறை அமைச்சகம் 1963-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் உள்பட மிக முக்கியமான பல்வேறு வழக்குகளை சிபிஐ இப்போது விசாரித்து வருகிறது. குவாஹாட்டி உயர் நீதிமன்ற தீர்ப்பால் அந்த அமைப்பே கேள்விக்குறியாகியுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐக்கு காவல் துறை அதிகாரங்கள் கிடையாது என குவஹாட்டி நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கூறியதாவது: இந்தத் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது. நீதிபதிகள் சட்டத்தை தவறாக புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள். டெல்லி சிறப்பு காவல் சட்டம் 1946ன் கீழ் 1963ல் சிபிஐ உருவாக்கப்பட்டது. இதன்படி சிபிஐக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
சிபிஐ தரப்பில் எந்த வழக்கையும் டெல்லி சிறப்பு காவல் சட்டத்தின் கீழ்தான் பதிவு செய்வோம். சிபிஐ என்பது நாடாளுமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட பெயர். சிபிஐக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகளில் கூறப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் அசாம் மாநிலத்தின் அனுமதி பெற்ற பிறகே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்போது இப்படி தீர்ப்பளித்திருப்பது தவறு. இவ்வாறு ரகோத்தமன் கூறினார்.
2ஜி வழக்கை தடை கோரும் ஆ.ராசா
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு சர்மா, குவாஹாட்டி உயர் நீதிமன்ற தீர்ப்பை தனது ஐ-பேடில் காட்டினார்.
சிபிஐ அமைப்புக்கு வழக்குகளை பதிவு செய்ய அதிகாரமில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் 2ஜி அலைக்கற்றை விசாரணையை நிறுத்த வேண்டும் என்று அவர் கோரினார்.
இந்த நிலையில், குவாஹாட்டி உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆ. ராசா உள்ளிட்டோர் தடை கோரியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT