Published : 24 Oct 2013 06:25 PM
Last Updated : 24 Oct 2013 06:25 PM
தவறான சிகிச்சையால், 1998-ல் தனது மனைவியை இழந்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய மருத்துவருக்கு ரூ.5.96 கோடி நஷ்டஈடு வழங்க, கொல்கத்தாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ (AMRI) மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோவில் வசித்து வரும் இந்திய மருத்துவரான குனால் சஹா எய்ட்ஸ் நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருபவர். இவரது மனைவி அனுராதா குழந்தைகள் மனநல மருத்துவராக பணியாற்றினார்.
கடந்த 1998-ம் ஆண்டு கோடை விடுமுறையயொட்டி, கொல்கத்தாவில் உள்ள சொந்த ஊருக்கு வந்த அனுராதாவுக்கு தோலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நிலைமை மேலும் மோசமானதை அடுத்து ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் மே 11-ம் தேதி சேர்க்கப்பட்டுள்ளார். முகர்ஜியின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அனுராதா உயிரிழந்தார்.
இதுகுறித்து, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (என்சிடிஆர்சி) சஹா புகார் செய்தார். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாகவே தனது மனைவி உயிரிழந்தார் என தனது மனுவில் கூறியிருந்தார். இதை விசாரித்த ஆணையம், சஹாவுக்கு ரூ.1.73 கோடி இழப்பீடு வழங்குமாறு கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சஹா மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் மருத்துவமனை நிர்வாகம் ரூ.5.96 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று இன்று உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன், மருத்துவர்கள் பல்ராம் பிரசாத் மற்றும் சுகுமார் முகர்ஜி ஆகியோர் தலா ரூ.10 லட்சமும், மருத்துவர் வைத்யநாத் ஹல்தார் ரூ.5 லட்சமும் சஹாவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் எஸ்.ஜே. முகோபாத்யாய மற்றும் வி. கோபால கவுடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
இந்த இழப்பீட்டுத் தொகையை 8 வாரத்துக்குள் 6 சதவீத வட்டியுடன் வழங்குமாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT