Published : 22 Jun 2017 09:14 AM
Last Updated : 22 Jun 2017 09:14 AM
ஆந்திர மாநில பிராமண கார்ப்பரேஷன் தலைவர் பதவியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரி ஐ.ஒய்.ஆர்.கிருஷ்ணா ராவ் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணா ராவ். மாநில முதன்மை செயலாளராக பதவி வகித்த இவர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். அதன்பிறகு மாநில பிராமண கார்ப்பரேஷன் தலைவராக ராவ் நியமிக்கப்பட்டார். பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராகவும், திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில், இவர் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருவதாக புகார் எழுந்தது. மேலும் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினரின் நடவடிக்கைகளை விமர்சித்தும் கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக, அரசின் ரகசிய தகவல்களை எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடம் இவர்கள் கசிய விட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் சந்திரபாபு நாயுடுவின் சம்மந்தி பாலகிருஷ்ணா நடித்து சமீபத்தில் வெளியான ‘கவுதமி புத்ரா சாதகர்ணா’ என்ற தெலுங்கு படத்துக்கு வரி விலக்கு வழங்கியதையும் கிருஷ்ணா ராவ் தீவிரமாக விமர்சனம் செய்தார்.
இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணா ராவை பிராமண கார்ப்பரேஷன் தலைவர் பதவியிலிருந்து நீக்கி முதல்வர் சந்திரபாபு நேற்று உத்தரவு பிறப்பித்தார். இவருக்கு பதிலாக ஆனந்த் சூர்யா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT