Published : 24 Jun 2017 10:04 AM
Last Updated : 24 Jun 2017 10:04 AM
கர்நாடக எம்எல்ஏக்கள் 2 பேரை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்காக 2 பத்திரிகை ஆசிரியர்களுக்கு தலா ஒரு வருடம் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் கோலிவாட் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள எலஹங்கா தொகுதி பாஜக எம்எல்ஏ எஸ்.ஆர்.விஸ்வநாத் நில அபகரிப்பு, ஊழல் செய்ததாக கடந்த 2014-ம் ஆண்டு புகார் எழுந்தது. இதையடுத்து ‘எலஹங்கா வாய்ஸ்’ பத்திரிக்கையில் எஸ்.ஆர்.விஸ்வ நாத் குறித்து தொடர் செய்திகளும் படங்களும் வெளியாகின. இதேபோல சிரகுப்பா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பி.என்.நாகராஜ் தனியார் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக ‘ஹாய் பெங்களூர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இதுகுறித்து 2 எம்எல்ஏக்களும் அப்போதைய சபாநாயகர் காகோடு திம்மப்பாவிடம் புகார் மனு அளித்தனர்.
சபாநாயகர் காகோடு திம்மப்பா இந்த புகார் குறித்து விசாரிக்க 5 எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரி களைக் கொண்ட சட்டப்பேரவை குழுவை உருவாக்கினார். இந்த குழு கடந்த இரு ஆண்டுகளாக எலஹங்கா வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் அனில் ராஜு, ஹாய் பெங்களூர் பத்திரிக்கையின் ஆசிரி யர் ரவி பெலகெரே ஆகியோரிடம் விசாரணை நடத்தியது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணை நிறைவடைந்த நிலையில், விசாரணைக் குழு 2 பத்திரிகை ஆசிரியர்களுக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்குமாறு பரிந்துரை செய்தது. எனவே தற்போது நடைபெற்றுவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எஸ்.ஆர்.விஸ்வநாத் (பாஜக), பி.என்.நாகராஜ் (காங்கிரஸ்) ஆகிய இரு எம்எல்ஏக்களும் பத்திரிகை ஆசிரியர்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தனர்.
காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், எம்எல்ஏக்களை பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என கடந்த புதன்கிழமை வலியுறுத்தினர். அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒப்புதலுடன் 2 பத்திரிகை ஆசிரியர்களுக்கு எதிராக நேற்று முன்தினம் தீர்மானமும் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட சட்டப்பேரவை சபா நாயகர் கே.பி.கோலிவாட், ‘‘சட்டப் பேரவை உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் ஹாய் பெங்களூர், எலஹங்கா வாய்ஸ் ஆகிய பத்திரிகைகள் அவதூறு செய்தி வெளியிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்திய அரசமைப்பு சட்டம் 194-ம் பிரிவின் கீழ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் புகழுக்கு களங்கம் விளைவித்த ஹாய் பெங்களூர் பத்திரிகையின் ஆசிரியர் ரவி பெலகெரே, எலஹங்கா வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் அனில் ராஜு ஆகிய இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அபராதமாக தலா ரூ.10 ஆயிரமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை செலுத்த தவறினால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
மேல்முறையீடு செய்ய திட்டம்
சபாநாயகர் கே.பி.கோலிவாட் வழங்கிய தீர்ப்பின் நகல் பெங்களூரு மாநகர காவல் ஆணையருக்கு நேற்று வழங்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரு போலீஸார் ஹாய் பெங்களூர் பத்திரிகையின் ஆசிரியர் ரவி பெலகெரே, எலஹங்கா வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் அனில் ராஜு ஆகிய இருவரையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட இரு பத்திரிகை ஆசிரியர்களும், சபாநாயகரின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித் துள்ளனர்.
இந்த விவகாரம் தேசிய ஊடக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT