Published : 26 Oct 2013 06:12 PM
Last Updated : 26 Oct 2013 06:12 PM
வெங்காயத்தை வைத்து நடத்தப்படும் அரசியல், டெல்லி மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுகட்டி விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக நாள்களாக நீடித்த பருவகாலம், புயல் ஆகியவற்றால் வெங்காய விளைச்சலில் 20 சதவிகிதம் உற்பத்தி குறைந்தது.
ஆனால், விலையோ 150 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க மத்திய அரசு இறுதி முயற்சி எடுத்து வருகிறது.
டெல்லியில் டிசம்பர் 4-ல் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெங்காய அரசியல் சூடு பிடிக்கத் துவங்கி விட்டது. 1998-ல் பாரதிய ஜனதா கட்சியின் அரசு கவிழ முக்கியக் காரணமாக இருந்தது வெங்காயம்தான். அன்று வெங்காயம் ரூபாய் 60 வரை விற்றதால் பாஜக அரசு பதவியிழந்தது. பாஜக மூத்த தலைவரான சுஷ்மா ஸ்வராஜ், 100 பிரசாரக் கூட்டங்களில் பேச திட்டமிட்டுள்ளார். அதில், சுஷ்மாவின் பிரசாரக் கரு வெங்காயமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் வட இந்திய மக்களின் முக்கிய உணவு. இங்கு ரொட்டிக்கு தொட்டு சாப்பிட குழம்பு போன்ற எதுவுமே இல்லை என்றாலும் ஒரு வெங்காயம் மற்றும் இரண்டு மிளகாய் கொடுத்து விட்டால் போதும், சமாளித்து விடுவார்கள்! இதனால்தான், ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் கோயில் மற்றும் பொதுநல அமைப்புகள் கட்டாயமாக ரொட்டியுடன் வெங்காயம் மற்றும் மிளகாயை சேர்த்துக் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு வெங்காயம் வட இந்தியவாசிகளின் மனதோடு ஒன்றிவிட்ட உணவு.
இது குறித்து டெல்லியின் ஆசாத்பூர் மொத்த வியாபார மார்கெட்டின் வெங்காய வியாபாரியான ராஜேந்தர் சஹானி கூறியது: ‘ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி செய்த போதும், வெங்காய விலை உயர்வு அரசியலானது. இதை உணர்த்தும் வகையில் டெல்லியில் தேர்தல் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்திக்கு வெங்காயம், பூண்டு கொண்ட மாலை அணிவிக்கப்பட்டது’ என்றார்.
தற்போது தன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், ரேஷன்கடை மூலம் மலிவு விலையில் வெங்காயம் விற்க ஆலோசனை செய்து வருகிறார். இது பற்றி ஷீலா தீட்சித் கூறுகையில், ‘கோலாப்பூர், நாசிக், கர்நாடகம் மற்றும் மபியில் 8000 குவிண்டால் வெங்காயம் வாங்க இருக்கிறோம். இதை டெல்லியின் ரேஷன் கடைகளின் மூலமாக லாப நஷ்டம் இன்றி விற்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம். எனவே, தயவு செய்து வெங்காயத்தை அரசியலாக்க வேண்டாம்’ என்றார்.
வெங்காய ஏற்றுமதி பற்றிய குற்றச்சாட்டு குறித்து NAFED எனப்படும் தேசிய வேளாண் கூட்டுறவு வணிக கூட்டமைப்பின் தலைவரும் டெல்லியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான டாக்டர் விஜேந்தர் சிங் பேசுகையில், ‘கடந்த மூன்று மாதங்களாக வெங்காயம் மிகக் குறைந்த அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வருடம் விளைச்சல் மிகவும் அதிகம் என்பதால் வரும் நாட்களில் வெங்காய விலை குறையும். ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டி இருக்கும்.’ என்றார். ஏற்றுமதிக்குப் பின் இறக்குமதி இந்தக் கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தின்படி 2011-12-ல் 15,52,904, 2012-13-ல் 18,22,760 மற்றும் 2013-14-ன் அக்டோபர் வரை 7,39136 மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளுக்கு நம் நாடு வெங்காயம் ஏற்றுமதி செய்கிறது.
ஐந்தாண்டுகளுக்கு முன் ஒருமுறை உற்பத்திக் குறைவால் மலேசியாவிற்கு நம் வெங்காய ஏற்றுமதி குறைந்தது. அது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. அதன் உணவுத்துறை அமைச்சர், மலேசியர்கள் இந்திய வெங்காயத்திற்கு அடிமையாக இருப்பதை விடுத்து தாய்லாந்து வெங்காயத்தை சாப்பிட பழக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதேசமயம், தனது வீட்டுச் சமையல்காரன் இந்திய வெங்காயம் கிடைக்கவில்லை என்பதால் சமைக்க மறுப்பதையும் நகைச்சுவையாக குறிப்பிட்டாராம்.
இப்போது வெங்காய விலையைக் கட்டுப்படுத்த வெங்காயம் விளையும் முக்கிய மாநிலங்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநில தலைமை செயலர்களை உணவு அமைச்சகம் டெல்லிக்கு அழைத்திருக்கிறது.
இதில், வெங்காயம் விளைச்சலை திட்டமிட்டு சீர்படுத்துவது குறித்து ஆலோசிக்க இருக்கிறது. இதேபோல், ஏற்றுமதி மற்றும் பதுக்கலையும் கட்டுப்படுத்தினால் வெங்காயத்தில் இருந்து அரசியலை பிரிக்க முடியும். டெல்லியில் உள்ள ஒரு கடையில் வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் வர்த்தகர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT