Published : 30 Jun 2017 10:41 AM
Last Updated : 30 Jun 2017 10:41 AM
“தீவிரவாதிகளின் கைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தும் பயங்கர ஆயுதங்கள் செல்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே, சர்வதேச தீவிரவாதத்தை தடுக்க விரிவான ஒப்பந்தத்தை உலக நாடுகள் கொண்டு வரவேண்டும்” என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ‘பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குச் செல்வதைத் தடுப்பது’ தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது ஐ.நா.வுக்கான நிரந்தர துணை பிரதிநிதி தன்மயா லால் நேற்றுமுன்தினம் பேசியதாவது:
உலகில் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை கையாள்பவர்களும் தீவிரவாதிகளும் கூட்டுச்சதி செய்ய வாய்ப்புள்ளது. இது கவலை அளிக்கிறது. இருதரப்பினரும் கூட்டு சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பது உண்மையிலே மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். எனவே, சர்வதேச தீவிரவாதத்தை தடுக்க உலக நாடுகள் விரைந்து பேசி விரிவான உடன்பாடு கொண்டுவருவது குறித்து முடிவெடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
இந்தியாவுக்கு அங்கீகாரம்
உள்நாட்டிலும் உலக அளவிலும் ஆயுதப் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த இந்தியா எப்போதும் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இதற்கு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் ‘ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில்’ (எம்டிசிஆர்) இந்தியாவை அதிகாரப்பூர்வ உறுப்பினராக ஏற்றுக் கொண்டதே சான்று.
இவ்வாறு தன்மயா லால் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT