Published : 03 Sep 2014 07:36 PM
Last Updated : 03 Sep 2014 07:36 PM
கங்கை நதியைச் சுத்தம் செய்வதற்கான தற்போதைய செயல் திட்டங்கள் உதவாது என்றும், படிப்படியான செயல் திட்டம் தேவை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான கங்கை நதியை சுத்தம் செய்தல் என்பதற்கு விதிமுறைகள் உள்ளிட்ட ஆட்சியதிகார அணுகுமுறை ஒரு போதும் உதவாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் உமாபாரதியின் நீராதாரம், நதிகள் மேம்பாடு, மற்றும் கங்கை சீரமைப்பு அமைச்சகம் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது குறித்து தெரிவிக்கும் போது, “மத்திய அரசின் தற்போதைய செயல் திட்டங்களைப் பார்க்கும்போது, 200 ஆண்டுகள் கழித்தும் கங்கையை சுத்தம் செய்ய முடியாது என்றே தோன்றுகிறது.
கனவுத் திட்டத்தை முதலில் மதிப்பீடு செய்யுங்கள், கங்கை நதியை அதன் ஆதிப் புனிதத்திற்கு மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கனவுத் திட்டம் கைவசம் உள்ளது, கங்கை நதியை அதன் அசலான தன்மையில் அடுத்தத் தலைமுறையினராவது காணட்டும், நாங்கள் அதனைப் பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை.
எனவே 3 வாரங்களில் படிப்படியாக என்ன திட்டம் என்பதைக் கொண்டு வாருங்கள் என்று நீதிபதிகள் டி.எஸ். தாக்கூர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2500கிமீ கங்கை நதியை சுத்தம் செய்வது பற்றி சாமானிய மக்களுக்கு எப்படி விளக்கப்போகிறார்கள் என்பதே தங்கள் கவலை என்றும் பிற நாடுகளிலிருந்து இந்தத் திட்டத்திற்கு வரும் பணம் பற்றிய கவலை இல்லை என்றும் கூறியுள்ளனர்.
"இதற்காக நியமிக்கப்படும் கமிட்டி பற்றியெல்லாம் நாங்கள் கவலை கொள்ள வேண்டியத் தேவை இருப்பதாகத் தெரியவில்லை. கங்கையை சுத்தம் செய்தல் என்ற திட்டத்தை எப்படி செய்யப்போகிறீர்கள் என்பதை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் திட்டமிடுவது அவசியம்.
நீங்கள் ஒரு ஆட்சியதிகார அணுகுமுறையையே இப்போது கொண்டு வந்துள்ளீர்கள், ஆனால் சாமானிய மக்களின் மொழியில் இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப் போகிறீர்கள் என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்" என்று சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT