Published : 05 Sep 2014 07:28 PM
Last Updated : 05 Sep 2014 07:28 PM

நாம் நல்ல ஆசிரியர்களை உலகுக்கு அளிக்க வேண்டும்: மாணவர்களிடம் மோடி விருப்பம்

இளைஞர்களின் எண்ணிக்கையை மிகுதியாகக் கொண்டிருக்கும் நாம், உலகுக்கு நல்ல ஆசிரியர்களை அளிக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களிடம் பிரதமர் மோடி தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

ஆசிரியர் தினத்தையோட்டி, பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்களுடன் வீடியோ-கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.

கவனத்துடன் பேசுகிறேன்!

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், பிரதமர் பதவி குறித்து ஒரு மாணவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மோடி, "பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான், தற்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். முதல்வராக பதவி வகித்தபோது நான் என்ன பேசுகிறேன் என்பது குறித்து கவலைப்பட்டதே இல்லை. ஆனால், தற்போது பிரதமர் பதவி வகிப்பதால், எனது வார்த்தைகளில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது.

நான் என்ன பேசுகிறேன் என்பதை உணர்ந்து பேசுகிறேன். காரணம், நான் இந்த நாட்டின் பிரதமர். எனது வார்த்தைகள், நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடக் கூடாது. அதனைத் தவிர, முதல்வராக நீண்ட காலம் பயணித்துவிட்டதால், பிரதமர் பதவியில் இருப்பதை நான் வித்தியாசமாக பார்க்கவில்லை" என்றார்.

பிரதமர் பதவியில் செயல்படுவது எப்படி?

"நீங்கள், எங்களது தலைமை ஆசிரியர் போல கண்டிப்பானவர் என்று நினைத்தோம். ஆனால், எங்கள் நண்பர்கள் போலவே பேசுகிறீர்களே" என்று மாணவர் ஒருவர் கூறியதற்கு, "நான் தலைமை ஆசிரியர் போன்றவர் இல்லை. கண்டிப்பானவர் அல்ல. ஆனால், செயலாற்றுவதில் கவனம் செலுத்துவேன். மற்றவர்களிடமிருந்து உரிய வேலையை தகுந்த நேரத்தில் பெறுவதே என் வேலை" என்றார் மோடி.

மேலும், "முதல்வர் பதவியிலிருந்து பிரதமர் பதவிக்கு மாறியதில் அலுவலக ரீதியில் மட்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தனிப்பட்ட முறையில் எந்த மாற்றமும் எனது வாழ்க்கையில் ஏற்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால், டெல்லிக்கு வந்து இன்னும் இந்த நகரத்தைக் கூட சுற்றிப் பார்க்கவில்லை. டெல்லியை சுற்றிப் பார்க்க எனக்கு நேரம் கிடையாது. வீட்டிலிருந்து அலுவலகம் செல்வது மற்றும் அலுவலகம் சென்று வீடு திரும்புவதுதான் தினசரி நிகழ்வாக இருக்கும். இப்போது இந்த நிகழ்ச்சி நடக்கும் வளாகம் புகழ்பெற்றது. ஆனால், உங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்ததால் இங்கு வந்தேன். அதுபோலவே, எல்லாம் அலுவல் ரீதியில் நடக்கும்" என்று அவர் பதிலளித்தார்.

எனது கவலை

மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்ந்து பேசிய மோடி, "ஆசிரியர் தினத்தை முன்னிட்டு உங்களிடம் பேசுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் கவலை அளிப்பது என்னவென்றால், இந்த தினத்தின் முக்கியத்துவம் வருடத்திற்கு வருடம் குறைந்துகொண்டே வருகிறது.

சில பள்ளிகளில் இதற்காக நிகழ்ச்சிகள்கூட நடத்தப்படுவது இல்லை. சமுதாயத்தில் ஆசிரியர்களின் முக்கியத்துவம் பெரியது. அவர்களை கவுரவிக்க வேண்டியது நமது கடமை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

உலக அளவில் ஆசிரியர்களின் தேவை நாளுக்கு நாள், துறைக்கு துறை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால் நல்ல மாணவர்கள் ஏன் இந்தத் துறைக்கு வருவது குறைந்துகொண்டு போகிறது என்பது மட்டும் புரியவில்லை. இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், ஏன் இந்த உலகிற்கு நமது நாட்டிலிருந்து நல்ல ஆசிரியர்களை தருவோம் என்ற வாக்குறுதியை தரமுடியவில்லை. நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் ஆசிரியர்களாக வேண்டும். எனது இந்தப் பேச்சை நினைவாக்க வேண்டும்.

நீங்கள் அதிகம் வாசிக்க வேண்டும். குறிப்பாக சுயசரிதைகளை தொடர்ந்து படிக்க வேண்டும். அவை உங்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடியதாக இருக்கும். சுயசரிதைகளை வாசிப்பது நமது வரலாறு குறித்த தெளிவினை ஏற்படுத்தும். உலக வரலாற்றையும் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். விளையாட்டு, திரைப்படங்கள், அறிவியல், வர்த்தகம் என பல்வேறு துறைகள் குறித்தும், அதில் சாதனை படைத்தவர்கள் குறித்தும் படிக்கலாம்.

அதற்கு ஈடு செய்யும் விதமாக விளையாட வேண்டும். அதிகம் விளையாடி, நிறைய வியர்க்க வேண்டும். இளமை காலத்தில் இது முக்கியமான வேலை. எனவே, இதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தொடர்ந்து விளையாடினால், உடலில் நல்ல வளர்ச்சி இருக்கும்" என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x