Published : 20 Sep 2014 09:30 AM
Last Updated : 20 Sep 2014 09:30 AM
பெங்களூரில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 362 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதிய உணவை வழங்கிய இஸ்கான் கோயில் நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பெங்களூரில் உள்ள அரசு உருது தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஜாகீர் அகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் முதலில் ஒரு மாணவி மயக்கம் அடைந்தார். அடுத்த 15 நிமிடத்தில் 20 மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர் களுக்கு அக்கம் பக்கத்தில் இருந்த வர்களின் உதவியுடன் முதலுதவி அளித்தோம்.
பிறகு மற்ற மாணவர் களும் மயக்கம் வருவதாக கூறினார் கள். இதையடுத்து மதிய உணவை பரிசோதித்தபோது சாம்பாரில் பல்லி கிடந்தது.
இதுதொடர்பாக, டி.ஜே.ஹள்ளி போலீஸாருக்கு தகவல் அளித்தோம். அதன் பிறகு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தோம். அதற்குள்ளாக 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி எடுத்தனர். சிலர் மயங்கி விழுந்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், 362 மாணவர்களை டாக்டர் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
மாணவர்களை நேரில் பார்த்த பெங்களூர் மாநகர காவல் துறை இணை ஆணையர் அலோக் குமார் கூறும்போது, “இது தொடர்பாக டி.ஜே.ஹள்ளி காவல் துறை ஆய்வா ளர் தலைமையிலான குழுவினர் பள்ளியில் விசாரணையை தொடங்கி உள்ளனர். மற்றொரு குழு இஸ்கான் கோயிலில் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இஸ்கான் மீது நடவடிக்கை தேவை
இதனிடையே மாணவர்கள் மயங்கிய தகவல் அறிந்த பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். குழந்தைகளைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் பெற்றோர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெற்றோர், “பெங்களூரில் உள்ள அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்குவதற்காக கர்நாடக அரசு ஆண்டுதோறும் இஸ்கான் கோயிலுக்கு கோடிகோடி யாக நிதி அளிக்கிறது. ஆனால் அவர் கள் மிகவும் அலட்சியமாக செயல் பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்..
சிகிச்சை செலவை அரசே ஏற்கும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்களை கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட பல அமைச்சர்கள் அதிகாரிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பதற்றமாக இருந்த பெற்றோருக்கும் ஆறுதல் கூறினர். சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT