Published : 18 Sep 2014 05:08 PM
Last Updated : 18 Sep 2014 05:08 PM

லவ் ஜிகாத்துக்கு எதிரான பிரச்சாரம் மேலும் தீவிரமடையும்: இந்துத்துவா அமைப்புகள்

உத்திரப் பிரதேச மாநில இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையிலும் லவ் ஜிகாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று இந்துத்துவா அமைப்புகள் கூறியுள்ளன.

கடந்த சில நாட்களாக லவ் ஜிகாத் என்ற பிரயோகம் பத்திரிகைகளிலும் பிற ஊடகங்களிலும் பரவலாகி வருகிறது. இந்துப் பெண்களை முஸ்லிம் வாலிபர்கள் காதல் வலையில் வீழ்த்துவதாகக் கூறி வரும் இந்துத்துவா அமைப்புகள் இதனை லவ் ஜிகாத் என்று பெயரிட்டுள்ளன. இதற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இடைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த லவ் ஜிகாத் பிரச்சாரம் ஓய்ந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் தேர்தல் பின்னடைவு என்பது வேறு, லவ் ஜிகாத் என்பது வேறு என்று அங்குள்ள இந்துத்துவா அமைப்புகள் கூறியுள்ளன.

இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு, லவ் ஜிகாத் பிரச்சாரத்தில் தீவிரமாக இயங்கி வரும் அமைப்பை நடத்தும் தொழிலதிபர் அஜய் தியாகி கூறுகையில், “தேர்தல் பின்னடைவுக்கும் இதற்கும் தொடர்பில்லை, எனவே நாங்கள் லவ் ஜிகாத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் மேலும் கவனமும் தீவிரமும் செலுத்துவோம். மஹந்த் ஆதித்யநாத்ஜி நொய்டா, லக்னோ தொகுதிகளில் லவ் ஜிகாத் பிரச்சாரம் மேற்கொண்டார் அந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜக வென்றுள்ளது.

அவர் மேலும் சில தொகுதிகளில் பிரச்சாரம் செய்திருந்தால் வெற்றிகள் அதிகரித்திருக்கும் என்றே நான் கூறுவேன்” என்றார். இவர் சிவில் என்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கன்னவ்ஜ் தொகுதியின் பாஜக எம்.பி. சாக்சி மகராஜ், 3 நாட்களுக்கு முன்பாக மத்ரசாவையும், பயங்கரவாதத்தையும் இணைத்துப் பேசியது மற்றும் லவ் ஜிகாத் மத்ரசாவில் ஊக்குவிக்கப்படுகிறது என்றும் கூறிய கருத்தை தான் முழுதும் ஏற்பதாகக் கூறிய அவர், இப்போது கூட மேற்கு உ.பி.யிலிருந்து இந்துப் பெற்றோர்கள் கவலையுடன் தங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்கின்றனர் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x