Published : 12 Aug 2014 11:37 AM
Last Updated : 12 Aug 2014 11:37 AM

தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி பணம் பறிப்பு: உத்தரப்பிரதேசத்தில் 3 பேர் கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, 50-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாந்தா தலைமை மருத்துவ அதிகாரியாக இருப்பவர் கேப்டன்.ராஜேஷ்குமார் சிங். இவருக்கு கடந்த ஜூலை 7-ல் லக்னோவில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து பேசுவதாக கமலேஷ் சர்மா என்பவர் அழைத்துள்ளார். அதில், பாந்தாவிற்காக வாங்கப்பட்ட சில மருந்துகள் தவறானவை எனவும், அதன் மீதான தகவல் கேட்டு ஒரு மனு வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதை, வெளியிட்டால் ராஜேஷ்குமார் சிங்கின் பதவி போய் விடும் எனவும், தமக்கு பணம் கொடுத்தால் தகவல் கோரும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட அந்த மனுவை சமாளித்து விடுவதாகவும் கமலேஷ் மிரட்டியுள்ளார்.

இதில் ராஜேஷ்குமாருக்கு சந்தேகம் வரவே அவர், லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். இவர்கள் தந்த யோசனையின் பேரில், ரூ 25,000 பேரம் பேசப்பட்டுள்ளது. அதை லக்னோவுக்கு அனுப்பி பணத்தை பெற்ற போது கமலேஷ் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அவருடைய சகாக்களான சஞ்சல் பட் மற்றும் பர்வசுவம் பட் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

லக்னோ காவல்துறை சிறப்புக் கண்காணிப்பாளர் பிரவிண்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக உ.பி மற்றும் உத்தராகண்டின் கல்வி, மருத்துவம், பொதுசுகாதாரம் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளின் அதிகாரிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பெயரில் மிரட்டி ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான தொகையைப் பறித்துள்ளனர். ஒவ்வொரு துறை அதிகாரிகளின் செயல்பாடுகளையும் நன்கு விசாரித்து அறிந்துள்ளனர்.

அவர்கள் 2-ம் மட்டத்தில் உள்ள அதிகாரிகளை மட்டும் அதிகமாக குறி வைத்துள்ளனர். இதுபோல் மேலும் பல மோசடிக் கும்பல்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரித்து வருகிறோம் என அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x