Published : 05 Aug 2014 11:00 AM
Last Updated : 05 Aug 2014 11:00 AM

லிபியாவில் சிக்கித் தவித்த கேரள நர்ஸ்கள் நாடு திரும்பினர்: உள்நாட்டுப் போரால் 6,000 இந்தியர்கள் தவிப்பு

உள்நாட்டுப் போர் தீவிரமடைந் துள்ள லிபியாவில் சிக்கித் தவித்த 44 கேரள நர்ஸ்கள் செவ்வாய்க் கிழமை நாடு திரும்பினர்.கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

லிபியாவில் அரசு நிர்வாகம் சீர்குலைந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. அங்கு சுமார் 18,000 இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தனர். உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டவுடன் படிப்படியாக இந்தியர்கள் வெளியேறத் தொடங்கினர்.

தற்போது அங்கு 6000 இந்தியர்கள் போர் முனையில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர் களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக 44 கேரள நர்ஸ்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

திரிபோலி மருத்துவக் கல்லூரி யில் பணியாற்றிய அவர்கள் சாலை வழியாக துனிசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கி ருந்து விமானம் மூலம் துபைக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் எமிரேட்ஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை அவர்கள் கொச்சி வந்தனர். விமான நிலையத் தில் குழுமியிருந்த பெற்றோர், உறவினர்கள் உயிர்தப்பி வந்த நர்ஸ்களை ஆரத் தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர்.

இதுகுறித்து கேரள அரசு மூத்த அதிகாரி சுதீப் கூறியபோது, இப்போது 44 நர்ஸ்கள் கொச்சி வந்துள்ளனர். மேலும் 10 நர்ஸ்கள் புதன்கிழமை காலை வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

4 மாதம் சம்பளம் இல்லை

லிபியாவில் இருந்து தப்பி வந்தது குறித்து நர்ஸ் ஜிஷா ஜார்ஜ் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து திரிபோலி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிறேன். என்னைப் போல 68 இந்திய நர்ஸ்கள் அங்கு பணியாற்றினோம். கடந்த 4 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. கடைசியாக 4000 தினாருக்கான காசோலையை வழங்கினர். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தில் போதுமான பணம் இல்லாததால் காசோலையை பணமாக்க முடியவில்லை.

அங்கு பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. நான் தங்கியிருந்த விடுதியில் 250 பெண்கள் இருந்தோம். அங்கு மின்சாரம் இல்லை. பணியாற்றிய மருத்துவமனை, தங்கியிருந்த விடுதி அருகே எப்போதும் வெடிகுண்டு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்றொரு நர்ஸ் கூறியபோது, திரிபோலியில் இருந்து துனிசியாவுக்கு 5 மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்தோம். வழியில் 2 பேர் சுட்டுக் கொல்லப்படுவதை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டோம். துனிசியாவுக்கு வரும்வரை உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை இல்லை என்றார்.

மேலும் 200 இந்தியர்கள் மீட்பு

மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

லிபியாவில் பணியாற்றும் இந்தியர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. செவ்வாய்க்கிழமை 44 கேரள நர்ஸ்கள் நாடு திரும்பியுள்ளனர்.

மேலும் 200 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் புதன்கிழமை நாடு திரும்புகிறார்கள். அவர்களையும் சேர்த்து கடந்த 2 நாட்களில் 500 பேரை மீட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x