Published : 07 Aug 2014 09:05 AM
Last Updated : 07 Aug 2014 09:05 AM
யூ.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதே சமயம், திட்டமிட்டபடி வரும் 24-ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்களுக்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி) சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வை நடத்துகிறது. இத்தேர்வின் இரண்டாம் தாளில் ஆங்கிலம் திறனறிதல் தொடர்பான கேள்விகள் கடந்த 2011-ம் ஆண்டு முதல் கேட்கப்பட்டு வருகின்றன. இது, இந்தி மற்றும் பிராந்திய மொழிகளை பயிற்றுமொழியாக கொண்ட மாணவர்களுக்கு பாதகமாக இருப்பதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, ஆங்கில திறனறிதல் தொடர்பான மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இரண்டாம் தாள் தேர்வையே முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மாணவர்கள் போராடி வருகின்றனர்.
இது தொடர்பாக நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் பேசிய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சர்வீசஸ் தேர்வு தொடர்பான அரசின் அறிவிப்பு தெளிவில்லாமல் உள்ளது என்று தெரிவித்தனர்.
மாநிலங்களவையில் புதன் கிழமை நடைபெற்ற கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “யூ.பி.எஸ்.சி. நடத்தும் இத்தேர்வில் பெரிய அளவில் சீர்திருத்தம் கொண்டு வருவது பற்றி விவாதம் நடத்த வேண்டும்.
அதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இதுபோன்ற கூட்டங்களும், விவாதங்களும் தொடர்ந்து நடைபெறும்.
வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு நமது வாழ்த்துகளை தெரிவிப்போம்” என்றார்.
அப்போது மார்க்சிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது: “அனைத்து கட்சிகளும், தங்களின் கருத்துகளை கடந்த சில நாட்களாக இந்த அவையில் தெரிவித்து வருகின்றன. அதன் அடிப்படையில் முடிவு எடுக்காமல், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவது ஏன்?” என்றார்.
மார்க்சிஸ்ட் உறுப்பினர் பி.ராஜீவ் பேசும்போது, “இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றால், ஆங்கிலத் திறனறிதல் தொடர்பான மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய பணியாளர் பயிற்சித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்பு வெளியிட்ட அறிவிப்பின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடு தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாகக் கூறி மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையில்…
சிவில் சர்வீசஸ் தேர்வில் கேள்விகளை ஆங்கிலத்திலிருந்து இந்தியில் மொழிபெயர்த்தது சரியாக இல்லாததால்தான் தேர்வு எழுதியவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதா என்று மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மத்திய பணியாளர் பயிற்சித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “மொழிபெயர்த்ததில் எந்த தவறும் இல்லை. அவை சரியாகத்தான் இருந்தன” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT