Published : 18 Nov 2025 08:19 AM
Last Updated : 18 Nov 2025 08:19 AM
புதுடெல்லி: பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் அமராவதியில் நடைபெற்ற ‘75-ஆவது ஆண்டில் இந்தியா மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியதாவது:
இட ஒதுக்கீட்டின் முன் ஐஏஎஸ் அதிகாரியின் குழந்தையையும், ஒரு சாதாரண ஏழை விவசாயத் தொழிலாளியின் குழந்தையையும் சமமாகக் கருத முடியாது. எனவே, பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்திரா சஹானி தீர்ப்பின்படி பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரில் நல்ல பொருளாதார நிலையில் உள்ளவர்களை கிரீமி லேயராக பிரித்து அவர்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோன்று பட்டியலின பிரிவினரிலும் கிரீமி லேயர் வரையறுக்கப்பட்டு அவர்களுக்கான இடஒதுக்கீடு சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த தீர்ப்பை நான் வழங்கியபோது கடும் விமர்சனம் எழுந்தது.
நாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல சமூக மற்றும் பொருளாதார ரீதியான நீதியைப் பெற சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவை அவசியமானது.
அரசியலமைப்பின் காரணமாகவே பட்டியல் சமூகத்திலிருந்து 2 பேர் நாட்டின் குடியரசுத் தலைவர்களாக ஆக முடிந்தது. மேலும், ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் குடியரசுத் தலைவராக ஆக முடிந்திருக்கிறது. நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் நான்கு தூண்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காலத்துக்கேற்ப மாற்றங்களைக் கொண்டுவரவே சட்டப்பிரிவு 368 ஏற்படுத்தப்பட்டது. ஒருபுறம் அரசமைப்புச் சட்டத்தில் மிக எளிதாக திருத்தம் மேற்கொள்வதை பி.ஆர்.அம்பேத்கர் விமர்சித்தார்.
மறுபுறம் சில சட்ட திருத்தங்களுக்கு 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை தேவை என்ற விதிக்கும் கடும் விமர்சனம் எழுந்தது. அரசமைப்பு நிர்ணய சபைக் கூட்டத்தில் வரைவு அரசமைப்புச் சட்ட முன்மொழிவின்போது அம்பேத்கர் ஆற்றிய உரைகளை சட்டம் பயிலும் மாணவா்கள் நிச்சயம் வாசிக்க வேண்டும்.
அடுத்த வாரம் எனது பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளேன். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நான் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி, ஆந்திர மாநிலம் அமராவதியில் இன்று நடந்துள்ளது. தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு நான் பங்கேற்ற முதல் விழா மகாராஷ்டிராவில் உள்ள எனது சொந்த ஊரான அமராவதியில் நடந்தது.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியின் குடிசைப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து நீதித்துறையின் மிக உயரிய பொறுப்பை நான் ஏற்க அரசமைப்புச் சட்டமே காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT