Published : 18 Nov 2025 07:22 AM
Last Updated : 18 Nov 2025 07:22 AM
புதுடெல்லி: டெல்லியில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக டாக்டர்களை மூளைச் சலவை செய்து இந்த சதித் திட்டத்தை தீட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. எனினும், முன்கூட்டியே சோதனை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டதால் பெரிய அளவிலான தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பேசியதாவது:
ஒரு நாட்டின் அரசு தீவிரவாதத்தை ஊக்குவித்தால் அது இந்தியாவுக்கு கவலை அளிக்கும் விஷயமாக மாறும். வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இதில் யாராவது தடைகளை ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கும்.
இயல்புநிலை பற்றி பேசும்போது, தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது. அமைதியான செயல்முறையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். அதற்கு நாங்கள் ஒத்துழைப்போம். அதுவரை தீவிரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் ஒரே மாதிரியாகத்தான் நடத்துவோம்.
தீவிரவாதிகளை ஊக்குவிப்போருக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். இன்று இந்தியா எந்த ஒரு மிரட்டலுக்கும் பயப்படாத நிலையில் உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் முன்னோட்டம்தான். அது 88 மணி நேரத்தில் முடிந்துவிட்டது. எதிர்காலத்தில் எந்த சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். பாகிஸ்தான் ஒரு வாய்ப்பு கொடுத்தால், பக்கத்து நாட்டிடம் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு உபேந்திர திவேதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT