Published : 17 Nov 2025 09:04 PM
Last Updated : 17 Nov 2025 09:04 PM

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு ஏன்? - வருவாய்த் துறை சங்கங்கள் விவரிப்பு

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் உரிய திட்டமிடல், போதிய பயிற்சிகள் இல்லாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அளவுக்கு அதிகமான பணி நெருக்கடி காரணமாக இதுதொடர்பான அனைத்து பணிகளையும் நாளை (நவ.18) முதல் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெரா) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய திட்டமிடல் இல்லாமல், போதிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது.

இதன்மூலம் அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் கடுமையான பணி நெருக்கடிகள், மன உளைச்சல் ஏற்படுத்தப்படுகிறது. இதை சரிசெய்ய வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஏற்கெனவே முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகும் பணி நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. சில மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் சார்நிலை அலுவலர்களை கஷ்டப்படுத்துகின்றனர்.

இதை உடனடியாக கைவிட வலியுறுத்தி நவம்பர் 18-ம் தேதி (இன்று) முதல் எஸ்ஐஆர் தொடர்பான படிவங்களைப் பெறுவது, இணையத்தில் பதிவேற்றம் செய்வது (Digitisation), ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பது என அனைத்துப் பணிகளையும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

இந்த போராட்டத்தில் அனைத்து கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர் முதல் ஆய்வாளர் வரை, அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை என அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலர்களும் முழுமையாக பங்கேற்பார்கள்.

மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர் (பிஎல்ஓ) பணி மேற்கொள்ளும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், நகராட்சி/மாநகராட்சிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர் பணி மேற்கொள்ளும் அனைத்து துறை அலுவலர் சங்கங்களையும் ஒருங்கிணைந்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

எஸ்ஐஆர் பணிக்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் தேவையான பயிற்சி அளிக்க வேண்டும். எஸ்ஐஆர் பணிகளை முழுமையாக பிழையின்றி மேற்கொள்ள, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர், கண்காணிப்பாளர் நிலைகளில் போதிய தன்னார்வலர்கள், அரசுப் பணியாளர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் ‘ஆய்வுக் கூட்டம்’ என்ற பெயரில் நள்ளிரவு வரை கூட்டம் நடத்துவதையும், தினமும் காணொலி வாயிலாக 3 கூட்டங்கள் நடத்துவதையும் உடனே கைவிட வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யக் கூடாது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர், கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும், கூடுதலான பணிச்சுமையை கருத்தில் கொண்டு, ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும். இந்த பிரச்சினையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு, சுமுகமான சூழலை ஏற்படுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x