Published : 17 Nov 2025 08:13 AM
Last Updated : 17 Nov 2025 08:13 AM
புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) நிறுவனர் லாலு மகள் ரோஹிணி ஆச்சார்யா, குடும்பம், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு சகோதரன் தேஜஸ்வியின் நெருங்கிய நண்பர்கள் ரமீஸ் நிமத் மற்றும் சஞ்சய் யாதவ்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டி உள்ளார். ஆர்ஜேடி.யில் அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரமீஸ், சஞ்சய் ஆகியோர் யார்?
கடந்த 2 ஆண்டுகளாக தேஜஸ்வியின் அரசியல் குழுவில் ரமீஸ் நிமத், சஞ்சய் யாதவ் ஆகியோர் முக்கியமானவர்களாக உள்ளனர். உ.பி. பல்ராம்பூரைச் சேர்ந்தவர் ரமீஸ். இவரது தந்தை நியாமத்துல்லா கான். பல்ராம்பூர் தொகுதி சமாஜ்வாதி முன்னாள் எம்.பி. ரிஸ்வான் ஜாகீரின் மருமகன் ரமீஸ். ரிஸ்வான் மூலம் அரசியல் அனுபவம் பெற்ற ரமீஸுக்கு தேஜஸ்வி நட்பு கிடைத்தது. தேஜஸ்வி விளையாடி வந்த கிரிக்கெட் கிளப்பில் ரமீஸும் இருந்தார். அதனால் இருவருக்குள் நட்பு உருவானது. அதன்பின் அரசியல் களத்தை ஏற்படுத்தி கொண்டார் ரமீஸ்.
ஆர்ஜேடியின் ‘வார் ரூம்’ எனப்படும் அரசியல் வியூகம் அமைக்கும் பிரிவுக்கு ரமீஸ் பொறுப்பாளரானார். இவர் கூறியபடியே சகோதரி ரோகிணியின் ஆதரவாளர்களில் ஒருவருக்கு கூட தேஜஸ்வி தேர்த் சீட் அளிக்கவில்லை. இது பூதாகரமாக வெடித்தது.
இதற்கிடையில், கடந்த ஜனவரி 4, 2022-ம் ஆண்டு பல்ராம்பூரின் துளசிபூர் நகர் பஞ்சாயத் தலைவர் பப்பு (எ) பிரோஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் கைதான ரிஸ்வான் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் ரிஸ்வான் மகள் ஜைபா, ரமீஸையும் கைது செய்தனர். ஆனால், இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். தவிர துளசிபூர், கோக்ராஜ் காவல் நிலையங்களில் கொலை உட்பட 12 வழக்குகள் ரமீஸ் மீது பதிவாகி உள்ளன. மாமானார் ரிஸ்வான் மூலம் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷையும் அடிக்கடி சந்தித்துள்ளார் ரமீஸ்.
ரோஹிணி குற்றம் சாட்டியுள்ள சஞ்சய் யாதவ், ஹரியானாவின் மகேந்திரகரைச் சேர்ந்தவர். டெல்லியில் புள்ளிவிவர நிபுணராக 3 தனியார் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். 2010-ல் அரசியல் ஆலோசகராக மாறி தன் பணியை ராஜினாமா செய்துள்ளார். ஹரியானாவில் இருந்து உ.பி.க்கு இடம் மாறியவர். அகிலேஷ் யாதவுக்கு அரசியல் ஆலோசகராக இருந்துள்ளார்.
பின்னர் தேஜஸ்வி கேட்டுக் கொண்டதன்படி 2012-ல் ஆர்ஜேடியில் சஞ்சய் இணைந்துள்ளார். அதன்பின் அவர் 2024-ல் ஆர்ஜேடியின் மாநிலங்களவை எம்.பி.யானார். இதுபோன்ற காரணங்களால் குடும்பம், கட்சியில் இருந்து விலகுவதாக ரோஹிணி கூறியுள்ளார். இதனால் ஆர்ஜேடி கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT