Published : 17 Nov 2025 08:01 AM
Last Updated : 17 Nov 2025 08:01 AM
புதுடெல்லி: காஷ்மீரில் தனது மகள் வேலைக்கு போக வேண்டாம் என்று தடுத்தும் மீறிச் சென்று காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்தில் தையல்காரர் உயிரிழந்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடி பொருட்களை ஆய்வுக்காக காஷ்மீர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், அந்த வெடிபொருட்களுக்கு பைகள் தைப்பதற்காக நவ்காமில் உள்ள டெய்லர் முகமது ஷபி பரே (57) என்பவரை வெள்ளிக்கிழமை காலை போலீஸார் அழைத்து சென்றனர். இந்நிலையில், சாப்பிடுவதற்காக டெய்லர் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மகள் ”வெளியில் கடும் குளிராக உள்ளது அப்பா. நீங்கள் வேலைக்கு போக வேண்டாம்” என்று கெஞ்சி அடம்பிடித்துள்ளார்.
அதற்கு டெய்லர் பரே ”சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன்” என்று கூறி மகளை சமாதானப்படுத்திவிட்டு சென்றுள்ளார். ஆனால், விதியின் விளையாட்டு உயிரில்லாத அவர் உடல் மட்டும்தான் மறுநாள் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, அப்பாவை பார்த்து மகள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
இது குறித்து டெய்லர் பரேவின் உறவினர் முகமது ஷபி ஷேக் கூறியதாவது: வெடிமருந்துகளுக்கு தனித்தனியாக பைகள் தைக்க வேண்டும் என்று கூறி பரேவை வெள்ளிக்கிழமை காலை அழைத்துச் சென்றனர். இரவு உணவுக்காக வீடு திரும்பிய பரேவை அவரது மகள் மீண்டும் போக வேண்டாம் என்று தடுத்துள்ளார். திரும்பி வந்துவிடுவேன் என இறுதி வார்த்தையை மகளிடம் கூறிச் சென்ற தந்தை பிணமாகத்தான் வீடு திரும்பினார். இரவில் மிகப்பெரிய அளவில் வெடிச்சத்தம் கேட்டது.
காவல் நிலையத்துக்கு ஓடிச்சென்று பார்த்தபோது அது இடிபாடுகளின் குவியலாக காட்சி அளித்தது. பலரது உடல்கள் அருகில் இருந்த மருத்துவமனை வளாகம் வரை சிதறிக் கிடந்தன. டெய்லர் பரேவுக்கு 3 குழந்தைகள், மனைவி உள்ளனர். பரே மட்டும் தான் உழைத்து அந்த குடும்பத்தை காப்பாற்றி வந்தார். தற்போது நிற்கதியாக தவிக்கும் பரேவின் குடும்பத்துக்கு அரசுதான் உதவ வேண்டும்” இவ்வாறு முகமது ஷபி ஷேக் கூறினார்.
இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT