Published : 17 Nov 2025 06:56 AM
Last Updated : 17 Nov 2025 06:56 AM
பாட்னா: உலக வங்கியிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடியை நிதிஷ் குமார் தலைமையிலான அரசு தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தி உள்ளதாக ஜன் சுராஜ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 243 இடங்களில் என்டிஏ 202, மெகா கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெற்றது. பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் தேசிய தலைவர் உதய் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிக்கப்படும் வரை, பொதுமக்களின் வாக்குகளை வாங்குவதற்காக நிதிஷ் குமார் தலைமையிலான பிஹார் அரசு ரூ.40 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. இது முன் எப்போதும் இல்லாத அளவு ஆகும். உலக வங்கியிடமிருந்து பெற்ற கடனில் ரூ.14 ஆயிரம் கோடி நன்கொடை மற்றும் இலவசங்களுக்காக திருப்பிவிட்டுள்ளது.
குறிப்பாக, தேர்தல் ஆதாயத்துக்காக முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோதிலும், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு வரையிலும் அந்த பணம் பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இது பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனால்தான் ஆளும் கட்சி வெற்றி பெற்றது. வாக்குகளை வாங்குவதற்காக பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி இருக்காவிட்டால், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியால் ஆட்சியை தக்க வைத்திருக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜன் சுராஜ் கட்சியின் மற்றொரு தலைவர் பவன் வர்மா கூறும்போது, "பிஹார் அரசின் கடன் ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. இதற்கு ஒரு நாளைக்கு ரூ.63 கோடி வட்டி செலுத்தப்படுகிறது. அரசு கஜானா காலியாக உள்ளது. இந்நிலையில், வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வதற்காக உலக வங்கியிலிருந்து பெற்ற கடனை, மகளிருக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்பதற்காக திருப்பி விடப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT