Published : 17 Nov 2025 12:35 AM
Last Updated : 17 Nov 2025 12:35 AM
பாட்னா: ‘‘என்னை அவதூறாக பேசி, காலணியை கழற்றி அடிக்க முயற்சி செய்தனர்’’ என்று லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வி மீது மறைமுமாக குற்றம் சாட்டி உள்ளார்.
பிஹார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத், ராப்ரி தம்பதியருக்கு மிசா பாரதி, ரோகிணி ஆச்சார்யா, சாந்தாசிங், ராகிணி யாதவ், ஹேமா யாதவ், அனுஷ்கா யாதவ், தேஜ்பிரதாப் யாதவ், ராஜலட்சுமி சிங் யாதவ், தேஜஸ்வி யாதவ் என 9 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இதில் மூத்த மகள் மிசா பாரதி, 2-வது மகள் ரோகிணி ஆச்சார்யா, மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அரசியலில் உள்ளனர்.
லாலுவின் மூத்த மகள் மிசா பாரதி கடந்த 2014-ம் ஆண்டில் அரசியலில் நுழைந்தார். லாலுவின் 2-வது மகள் ரோகிணி ஆச்சார்யா எம்பிபிஎஸ் படித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு அவர் தனது கணவர் ராவ் சமரேஸுடன் சிங்கப்பூரில் வசித்து வந்தார். சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட லாலுவுக்கு கடந்த 2022-ம் ஆண்டில் ரோகிணி சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். இதைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டில் அவர் பிஹார் அரசியலில் கால் பதித்தார். அந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார். இதன்பிறகு அவர் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி அவர் மீண்டும் பிஹாருக்கு திரும்பி வந்தார். இதற்கு தேஜஸ்வி யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் லாலுவின் சமரசத்தால் ரோகிணி, பிஹார் தேர்தலில் அதிதீவிரமாக பணியாற்றினார். இந்த சூழலில் பிஹார் தேர்தலில் ஆர்ஜேடி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி 143 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் தோல்வி தொடர்பாக ரோகிணி மீது தேஜஸ்வி குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் ரோகிணி நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், “நான் அரசியலில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் விலகுகிறேன். சஞ்சய் யாதவும் ரமீஸும் (தேஜஸ்வியின் நண்பர்கள்) இதைத்தான் விரும்புகின்றனர். எல்லா பழியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ரோகிணி நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: நேற்று (சனிக்கிழமை) ஒரு மகள், சகோதரி, மனைவி, ஒரு தாய் அவமதிக்கப்பட்டாள். மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டப்பட்டாள். (தேஜஸ்வி) காலணியை கழற்றி அடிக்கவும் முயற்சி செய்தனர். ஆனால் நான் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை. வேறு வழியின்றி நேற்று (சனிக்கிழமை) கண்ணீர்விட்டு நின்ற பெற்றோரையும் சகோதரிகளையும் விட்டு பிரிந்து வந்தேன்.
எனது தாய் வீட்டில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டனர். நான் ஆதரவற்று நிற்கிறேன். எனது பாதையை வேறு யாரும் தேர்வு செய்ய வேண்டாம். எந்தவொரு குடும்பத்திலும் ரோகிணி போன்ற பெண் பிறக்கக் கூடாது. நான் மோசமானவள், அழுக்கானவள் என்று குற்றம் சாட்டினர். எனது தந்தைக்கு (லாலு) சிறுநீரகத்தை கொடுத்து, கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டதாகவும் தேர்தலில் சீட்களை பெற்றுக் கொண்டதாகவும் குற்றம் சுமத்தினர். திருமணமான அனைத்து பெண்களுக்கும் ஓர் அறிவுரையை கூற விரும்புகிறேன். உங்கள் வீட்டில் அண்ணன், தம்பி இருந்தால் தவறுதலாககூட உங்கள் தந்தையை காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டாம். தம்பியோ, அண்ணனோ அல்லது அவரது ஹரியானா நண்பரையோ (தேஜஸ்வியின் நண்பர் சஞ்சய் யாதவ்) சிறுநீரகத்தை தானம் செய்ய சொல்லுங்கள்.
திருமணமான பெண்கள் அவரவர் குடும்ப நலன்களில் மட்டுமே அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் கணவர், பிள்ளைகள் மீது மட்டும் அக்கறை செலுத்துங்கள். எனது தந்தையின் குடும்பத்துக்காக எனது 3 பிள்ளைகளை சரியாக கவனிக்கவில்லை. நான் மாபெரும் தவறு செய்து விட்டேன். எனது கணவர், அவரின் உறவினர்கள் அறிவுரையை மீறி எனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கினேன். எனது கணவரின் பேச்சை கேட்கவில்லை. கடவுள் போன்ற எனது தந்தையை காப்பாற்ற சிறுநீரகத்தை தானமாக வழங்கினேன். அதற்கு நன்றிக்கடனாக என்னை மோசமானவள் என்று சபிக்கின்றனர். நான் செய்த தவறை யாரும் செய்ய வேண்டாம். என்னைப் போன்ற மகளாக யாரும் இருக்க வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT