Published : 16 Nov 2025 07:21 PM
Last Updated : 16 Nov 2025 07:21 PM
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக உலக வங்கியின் நிதி ரூ.14 ஆயிரம் கோடியை மத்திய அரசு எடுத்து பெண் வாக்காளர்களுக்கு விநியோகித்ததாக ஜன் சுராஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பவன் வர்மா அளித்த பேட்டியில், “முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் 1.25 கோடி பெண் வாக்காளர்களின் கணக்குகளுக்கு ரூ.10,000 மாற்றப்பட்டது. தற்போது பிஹாரில் பொதுக் கடன் ரூ.4,06,000 கோடியாக உள்ளது. ஒரு நாளைக்கு வட்டி ரூ.63 கோடி, அரசின் கருவூலம் காலியாக உள்ளது.
மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட தலா ரூ.10,000, உலக வங்கியிலிருந்து வேறு ஏதோ ஒரு திட்டத்திற்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து எடுத்து தவறாக பயன்படுத்தப்பட்டது. தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலாகும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
நான் சொன்னது போல், இது எங்கள் தகவல். அது தவறாக இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அது உண்மையாக இருந்தால், இது எவ்வளவு தூரம் நெறிமுறை சார்ந்தது என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கம் நிதியை பயன்படுத்திய பின்னர், தேர்தலுக்குப் பிறகு வேறு வகையில் விளக்கம் அளிக்க முடியும்.
மொத்தமுள்ள நான்கு கோடி பெண்களில் 2.5 கோடி பேர் இன்னும் அந்தத் தொகையைப் பெறவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வராவிட்டால் இந்த தொகை தங்களுக்கு கிடைக்காது என்று அவர்கள் நினைத்தனர். எங்கள் கட்சியின் தோல்விக்கு கடைசி நிமிடத்தில் ரூ.10,000 மாற்றப்பட்டது மற்றும் பெண்களுக்கு வழங்கிய நலத்திட்டங்கள் முக்கிய காரணம்” என்று பவன் வர்மா கூறினார்.
பிஹார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியடைந்தது. அக்கட்சி போட்டியிட்ட 238 தொகுதிகளில் 236 இடங்களில் டெபாசிட் இழந்தது, இந்த தேர்தலில் அக்கட்சிக்கு 3.44 சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT