Published : 16 Nov 2025 09:12 AM
Last Updated : 16 Nov 2025 09:12 AM
புதுடெல்லி: பிஹார் தேர்தல் தோல்வியை அடுத்து, வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாநிலங்களவையில் ஒரு எம்.பி. கூட இல்லாத கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் மாறப் போகிறது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் என்டிஏ (ஐஜத - பாஜக) கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மெகா கூட்டணி (ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ்) படுதோல்வி அடைந்தது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த தோல்வி மாநிலங்களவை தேர்தலில் ஆர்ஜேடிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. வரும் 2030-ம் ஆண்டு பிஹாரில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். அதற்கு முன்னதாக தற்போது ஆர்ஜேடி கட்சியில் உள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலமும் முடிந்துவிடும். அதன்பிறகு 30 ஆண்டு கட்சி வரலாற்றில் மாநிலங்களவையில் ஒரு எம்.பி.கூட இல்லாத கட்சியாக ஆர்ஜேடி மாறும்.
5 எம்.பி.க்கள்: ஆர்ஜேடியில் தற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள பிரேம் சந்த் குப்தா (ஆர்ஜேடி மாநிலங்களவை தலைவர்), ஏ.டி.சிங் ஆகியோரின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிகிறது. பையாஸ் அகமதுவின் பதவிக்காலம் 2028-ம் ஆண்டு ஜூலையில் முடிகிறது. மனோஜ் குமார் ஜா, சஞ்சய் யாதவ் ஆகிய இருவரின் பதவிக் காலம் 2030-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிகிறது.
அடுத்த 2026-ம் ஆண்டு பிஹாரில் காலியாகும் 5 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடைபெறும். அப்போது ஆர்ஜேடி 2, ஐஜத 2, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 1 என 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும். இந்த 5 இடங்களுமே என்டிஏ கூட்டணிக்கு செல்லும். இதன் மூலம் மாநிலங்களவையில் என்டிஏ கூட்டணி பலம் பெறும்.
அதேபோல், வரும் 2028-ம் ஆண்டு பாஜக.வில் 3, ஐஜத மற்றும் ஆர்ஜேடி.யில் தலா ஒருவரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் முடிகிறது. இந்த 5 இடங்களும் கூட என்டிஏ கூட்டணிக்கே செல்லும்.
ஒவைசி ஆதரவு: பிஹார் தேர்தலில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கட்சி வரும் 2030-ம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் ஒருவேளை ஆதரவளித்தால் ஒரு இடத்தில் மட்டும் ஆர்ஜேடி.க்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கும்.
ஆனால், அதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. ஏனெனில், பிஹார் தேர்தலில் கூட்டணியில் சேர விரும்பிய ஒவைசியை தேஜஸ்வி தவிர்த்துவிட்டார். இதனால் ஒவைசியின் ஆதரவு கிடைப்பது கடினம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT