Published : 16 Nov 2025 07:14 AM
Last Updated : 16 Nov 2025 07:14 AM
புதுடெல்லி: டெட் டிராப் இ-மெயில்களை தீவிரவாதிகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையில், வெடிபொருளுடன் கூடிய அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி ஓட்டி வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக மருத்துவர்கள் முஜம்மில் ஷகீல், ஆதில், ஷாஹீத் சயீத் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாத கும்பலைச் சேர்ந்த அனைவரும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள ஒரே முகவரி கொண்ட (டெட் டிராப்) இமெயில்களை பயன்படுத்தியுள்ளனர் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரே முகவரி கொண்ட இமெயிலை தீவிரவாதக் குழுவினர் பயன்படுத்துவர். அந்த இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் விவரங்களை தீவிரவாத குழுவைச் சேர்ந்த அனைவரும் அறிந்து வைத்திருப்பர். தகவல்களை பரிமாறிக் கொள்ள அந்த இமெயிலில் டைப் செய்துவிட்டு மெயிலை அனுப்பாமல் அதை அப்படியே குளோஸ் செய்துவிடுவர்.
இந்த விவரங்களை தீவிரவாதக் குழுவில் உள்ள மற்ற தீவிரவாதிகள் ஓப்பன் செய்து பார்த்துவிட்டு, விவரங்களைப் பெற்றுக் கொள்வர். மேலும் அதில் கூடுதல் தகவல்களைப் பதிவு செய்யவேண்டுமென்றாலும் டைப் செய்துவிட்டு அப்படியே விட்டுவிடுவர். தீவிரவாதக் குழுவினர் பயன்படுத்தும் இதை டெட் டிராப் இமெயில் என அழைக்கின்றனர். வழக்கமாக உளவுத் துறையினர் கடைபிடிக்கும் இந்த பாணியை டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய நபர்களும் பயன்படுத்தியுள்ளனர் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய புகைப்படம் வெளியீடு: இதனிடையே வெடிகுண்டு சம்பவத்தை அரங்கேற்றிய மருத்துவர் உமர் முகமதுவின் புதிய புகைப்படத்தையும் போலீஸார் நேற்று வெளியிட்டனர். ஹரியானாவின் பரிதாபாத்திலுள்ள ஒரு கடையில் பதிவாகியிருந்த வீடியோ பதிவிலிருந்து இந்த புகைப்படத்தை என்ஐஏ அதிகாரிகள் எடுத்துள்ளனர். அந்த வீடியோ பதிவில் 2 செல்போன்களுடன் உமர் முகமது காணப்படுகிறார். இதையடுத்து விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT