Published : 16 Nov 2025 07:02 AM
Last Updated : 16 Nov 2025 07:02 AM
சூரத்: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் சாதி அரசியலை மக்கள் நிராகரித்து உள்ளனர். இந்த தேர்தலில் தோல்வியை தழுவியவர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த தினம் மற்றும் பழங்குடியினர் கவுரவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குஜராத்தின் நர்மதா மாவட்டம், டெடியாபடா பகுதியில் உள்ள தேவமோக்ரா தேவி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழிபட்டார். இந்த கோயில் பழங்குடி மக்களின் கோயில் ஆகும்.
பின்னர் அங்கு நடந்த விழாவில் ரூ.9,700 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சுதந்திர போராட்ட காலத்தில் பழங்குடியின மக்கள் வீரதீரமாக போரிட்டனர். ஆனால் சுமார் 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை.
பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா முழுமையாக புறக்கணிக்கப்பட்டார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முண்டாவின் பிறந்த தினம் பழங்குடியினர் கவுரவ தினமாக அறிவிக்கப்பட்டது. பழங்குடியின மக்களின் நலன்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பழங்குடியினர் நலனுக்காக தனித் துறை தொடங்கப்பட்டது.
குஜராத்தில் 2 பழங்குடி பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும் குஜராத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் 10,000 பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. பாஜக சார்பில் பழங்குடியின மக்கள் மிக உயர்ந்த பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர். பழங்குடியினத்தை சேர்ந்த மோகன் சரண் மாஜி ஒடிசா முதல்வராக பதவி வகிக்கிறார். இதேபோல பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் பழங்குடியின மக்கள் மிக முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் சூரத்தில் புல்லட் ரயில் திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் சாதி அரசியலை மக்கள் முழுமையாக நிராகரித்து உள்ளனர். இந்த தேர்தலில் தோல்வியை தழுவியவர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர். தோல்வி அதிர்ச்சியில் இருந்து மீள அவர்களுக்கு பல மாதங்கள் ஆகும்.
ஜாமீனில் வெளியே நடமாடும் சில தலைவர்கள், வக்பு சட்ட திருத்த சட்ட நகலை கிழித்து எறிந்தனர். அந்த சட்டத்தை பிஹாரில் அமல்படுத்த விடமாட்டோம் என்று சபதம் ஏற்றனர். ஆனால் அவர்களை மக்கள் புறக்கணித்து, வளர்ச்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் இடையே 10 சதவீத வாக்குகள் வித்தியாசம் உள்ளது. இது மிகப்பெரிய வித்தியாசம். இதன்மூலம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றிருக்கிறோம். பிஹாரில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அந்த மாநிலம் அதிவேகமாக முன்னேறும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT