Published : 16 Nov 2025 06:57 AM
Last Updated : 16 Nov 2025 06:57 AM
புதுடெல்லி: பிஹார் தேர்தல் தோல்வி தொடர்பாக டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி படுதோல்வி அடைந்திருக்கிறது. குறிப்பாக 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார். கார்கே வீட்டில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் வேணுகோபால், அஜய் மக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அஜய் மக்கான் பேசும்போது, “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் ஆரம்பம் முதலே நேர்மையாக நடைபெறவில்லை. வாக்கு திருட்டு, தேர்தல் முறைகேடுகளால் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தலில் மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. அடுத்த 2 வாரங்களில் ஆதாரங்களை சமர்ப்பிப்போம்’’ என்று தெரிவித்தார். பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
கூட்டத்துக்குப் பிறகு வேணுகோபால் கூறியதாவது: பிஹார் தேர்தல் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்களை அடுத்த சில வாரங்களில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம். ஒரு தேர்தலில் 90 சதவீத வெற்றி என்பது நம்ப முடியாத ஒன்று. இந்திய வரலாற்றில் இதுபோன்ற வெற்றி பதிவு செய்யப்படவில்லை. பிஹார் தேர்தல்களிலும் இதுபோன்ற வெற்றி பதிவாகவில்லை. முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்களை மக்களிடம் சமர்ப்பிப்போம். இவ்வாறு வேணுகோபால் தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிஹார் தேர்தலில் மெகா கூட்டணிக்கு வாக்களித்த லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு நன்றி. பிஹார் தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் அளிக்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே நேர்மையாக நடைபெறாத தேர்தலில் வெற்றியை பெறமுடியவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்தை காப்பாற்ற போராடி வருகிறோம். தேர்தல் முடிவுகள் தொடர்பாக இண்டியா கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஆய்வு செய்யும். ஜனநாயகத்தை காப்பாற்றும் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT