Published : 16 Nov 2025 12:11 AM
Last Updated : 16 Nov 2025 12:11 AM

தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து கைப்பற்றிய வெடிபொருள் வெடித்து காஷ்மீரில் 9 பேர் பரிதாப உயிரிழப்பு: 32 பேர் படுகாயம்

காஷ்மீரின் நவ்காம் காவல் நிலைய வளாகத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த ஒருவரது உறவினர்கள் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர்.படம்: பிடிஐ

புதுடெல்லி: தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை ஜம்மு - காஷ்மீரில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வு செய்தபோது திடீரென வெடித்ததில் போலீஸார், தடயவியல் நிபுணர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காவல் நிலையக் கட்டிடம் பலத்த சேதமடைந்தது.

ஜம்மு - காஷ்மீரில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்து புன்போரா, நவ்காம் உள்ளிட்ட இடங்களில் கடந்த அக்டோபர் மாத மத்தியில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் ஆதில் என்ற மருத்துவரை சிறப்பு விசாரணைக் குழுவினர் முதலில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய மருத்துவர் முஜம்மில் ஷகீல் கைது செய்யப்பட்டார்.

அவர் தங்கியிருந்த 2 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட் உட்பட 2,900 ஆயிரம் கிலோ வெடிபொருட்
கள், ரசாயனங்கள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஒரு காரில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த காரின் உரிமையாளரான பெண் மருத்துவர் ஷாகின் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் பல மருத்துவர்களை மூளைச் சலவை செய்து, நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்ததிட்டமிட்டது தெரியவந்தது. இதற்கிடையே, கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே மருத்துவர் உமர் நபி காரை வெடிக்கச் செய்ததில் 13 பேர் உயிரிழந்தனர். அவரும் அல்பலா மருத்துவமனையில் பணியாற்றியது தெரியவந்தது. இதன் மூலம் ‘ஒயிட் காலர்’ தீவிரவாத சதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது.

இந்நிலையில், பரிதாபாத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் ஒரு பகுதி, இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீஸார், காவல் துறை புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த வெடிபொருட்களை ஆய்வு செய்யும் பணியில் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு தடயவியல், ரசாயன ஆய்வில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் காவல் நிலைய கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் காவல் துறையினர் விரைந்துசென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த நிலையில், 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5 பேரின் நிலைகவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத் கூறும்போது, ‘‘அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருட்களை ஆய்வு செய்த பிறகு, அவற்றை செயலிழக்கச் செய்வதற்காகநிபுணர்கள் பேக்கிங் செய்த போது எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது’’ என்றார். செய்தியாளர்களிடம் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் (காஷ்மீர் பிரிவு) பிரசாந்த் லோகண்டே நேற்று கூறியதாவது: ஹரியானாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள், ரசாயனங்கள் காஷ்மீரின் நவ்காம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள திறந்தவெளி பகுதியில்பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. வெடிபொருட்களை தடயவியல் நிபுணர்கள், போலீஸார் உள்ளிட்டோர் 14-ம் தேதி இரவு 11.20 மணிக்கு நிலையான நடைமுறைகளின்படி ஆய்வு செய்தனர். எனினும், அவை எதிர்பாராத விதமாக வெடித்தன. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 27 போலீஸார், 2 வருவாய்த் துறை அதிகாரிகள், பொதுமக்கள் 3 பேர் என 32 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு ஆதரவாக இருக்கும். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது எதிர்பாராமல் நடந்த விபத்து. இதுபற்றி பொதுமக்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

துணைநிலை ஆளுநர் இரங்கல்: ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளை அரசு செய்யும். வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x