Published : 15 Nov 2025 07:21 PM
Last Updated : 15 Nov 2025 07:21 PM
சூரத்: முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை நாடு நிராகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "பிஹார் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. குஜராத்தில் குறிப்பாக சூரத்தில் வசிக்கும் பிஹார் சகோதரர்கள், இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க உரிமை உண்டு. குஜராத் மக்கள் என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தபோது, இந்தியாவின் வளர்ச்சிக்காக குஜராத்தின் வளர்ச்சியை நாங்கள் முன்னிருத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியும். பிஹார் மக்களும் இதை அறிவார்கள். எங்கள் அடிப்படை சிந்தனை தேசம் முதலில் என்பதுதான்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் தோல்வி அடைந்த மகா கூட்டணிக்கும் இடையே 10% வாக்கு வித்தியாசம் உள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம். இதன் பொருள், பொதுவான வாக்காளர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளனர். பிஹாரின் வளர்ச்சிக்கான அவர்களின் ஆர்வத்தை இது பிரதிபலிக்கிறது. புதிய உயரங்களை அடைவதற்கான விருப்பத்தை பிஹார் தற்போது வெளிப்படுத்துகிறது.
பிஹார் தேர்தலில் பெண்களும் இளைஞர்களும் ஒரு சக்திவாய்ந்த கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இது வரவிருக்கும் பல பத்தாண்டுகளுக்கு பிஹார் அரசியலின் அடித்தளத்தை வலுப்படுத்தும். ஜாமீனில் வெளியே இருக்கும் தலைவர்கள், பிஹாரில் சாதி வெறியைத் தூண்ட பிரச்சாரம் செய்தார்கள். சாதிவெறியின் விஷத்தை முடிந்த மட்டும் பரப்ப அவர்கள் முயன்றார்கள். ஆனால், பிஹார் மக்கள் சாதிவெறியின் விஷத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட்டார்கள்.
பிஹாரில் பொது நிலங்கள் பெரும்பாலும் வக்பு சொத்துக்களாக மாற்றப்பட்டன. தமிழ்நாட்டிலும் இதேபோன்ற சூழ்நிலை இருப்பதை நாங்கள் கண்டோம். அங்கு பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்களும் கிராமங்களும்கூட வக்பு சொத்துக்களாக அறிவிக்கப்பட்டன. அதற்காகத்தான் நாங்கள் வக்பு சட்டத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தோம். இத்தகைய வகுப்புவாத விஷத்தை முற்றிலுமாக நிராகரித்து பிஹார் மக்கள் வளர்ச்சிப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர்.
முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை இந்த நாடு நிராகரித்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை இப்போது யாராலும் காப்பாற்ற முடியாது. பழங்குடியினர் நலனுக்கு பாஜக எப்போதுமே உயர் முன்னுரிமையை கொடுத்து வருகிறது. பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் அநீதிக்கு முடிவு கட்டுவதற்கும் வளர்ச்சியின் பலன்கள் அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கும் பாஜக உறுதிபூண்டுள்ளது" என்று பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT