Published : 15 Nov 2025 07:56 AM
Last Updated : 15 Nov 2025 07:56 AM
புதுடெல்லி: நாட்டில் மிக நீண்ட காலம் பதவி வகித்த முதல்வர்களில் நிதிஷும் இடம்பெற்றுள்ளார். சுமார் 20 ஆண்டுகும் மேலாக இவர் முதல்வராகப் பதவி வகிக்கிறார்.
முதன்முதலில் இவர் மார்ச் 3, 2000 அன்று முதல்வராகப் பதவியேற்றார். இந்த அரசு மெஜாரிட்டி நிரூபிக்க முடியாமல் அடுத்த 7 நாட்களில் கவிழ்ந்தது. ஓராண்டுக்கு பிறகு நடந்த தேர்தலில் ஆர்ஜேடி கட்சி சார்பில் லாலுவின் மனைவி ராப்ரி தேவி மீண்டும் முதல்வரானார். அதன்பிறகு நவம்பர் 2005 தேர்தலில் பெரும்பான்மை பெற்று நிதிஷ்குமார் முதல்வர் ஆனார்.
கடந்த 2010-ல் நிதிஷ் 3-வது முறை முதல்வரானார். கடைசி 2 ஆட்சியிலும் நிதிஷுக்கு பாஜக முழு ஆதரவளித்தது. பின்னர் 2014-ல் பாஜக.வில் இருந்து நிதிஷ் பிரிந்தார். லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணியில் இணைந்தவர் 2015-ல் மகத்தான வெற்றி பெற்றார். இதில், முதல்வராக நிதிஷ் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2017-ல், அவர் மெகா கூட்டணியில் இருந்து பிரிந்து மீண்டும் என்டிஏ.வுக்கு திரும்பினார். 2020-ல் மறுபடியும் முதல்வரான நிதிஷ்குமார், 2022-ல் மீண்டும் என்டிஏ.வில் இருந்து வெளியேறி ஆர்ஜேடி, காங்கிரஸின் மெகா கூட்டணி சார்பில் முதல்வரானார்.
இதற்கிடையில் மே 24, 2024 முதல் 278 நாட்கள் ஜேடியு ஆட்சியில் ஜிதன்ராம் மாஞ்சி இடைக்கால முதல்வராக இருந்தார். ஜனவரி 2024-ல், நிதிஷ் மீண்டும் மெகா கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் இணைந்து, 9-வது முறையாக முதல்வரானார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்றதால் 10-வது முறையாக முதல்வர் பொறுப்பேற்க உள்ளார்.
பிஹாரில் கடந்த மாதம் 26-ம் தேதி பெண்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அன்றைய தினமே இத்திட்டத்தின் கீழ் 1.5 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு தலா ரூ.10,000 டெபாசிட் செய்யப்பட்டது. பிஹார் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதால், நிதிஷ் அரசு வாக்குகளை பணம் கொடுத்து வாங்குகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், முதல்வர் நிதிஷ் தலைமையிலான என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
பிஹார் தேர்தலில் 71 சதவீதத்துக்கும் அதிகமான பெண் வாக்காளர்கள் என்டிஏ.வுக்கு வாக்களித்தனர்.ரூ.10,000 நிதியைப் பெற்ற பெண்கள் மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரும் என்டிஏ.வுக்கு வாக்களித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தின்படி, பெண்கள் ரூ.10,000-த்தை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. பெண்கள் சிறிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்ளவே இந்த தொகை வழங்கப்பட்டது. இதில் பெண்கள் வெற்றிகரமாக வேலைவாய்ப்பை உருவாக்கினால், அவர்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் கடனை பிஹார் அரசு வழங்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற திட்டங்களால் முதல்வர் நிதிஷ் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT