Published : 15 Nov 2025 12:15 AM
Last Updated : 15 Nov 2025 12:15 AM
புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு பிஹார் தேர்தல் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அவர் பேசியதாவது: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும் பிஹார் மக்கள் மீது திரும்பியிருக்கிறது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் பெருந்திரளாக திரண்டு வந்து வாக்களித்தனர். வளர்ச்சிக்கு ஆதரவாக பிஹார் மக்கள் வாக்களித்து உள்ளனர். முந்தைய தேர்தல் வரலாற்று சாதனைகள் தற்போது உடைக்கப்பட்டு உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிஹார் மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.
முதல்வர் நிதிஷ் குமாரின் சீரிய தலைமை தேர்தல் வெற்றிக்கு வழிவகுத்தது. கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் மிகக் கடுமையாக உழைத்தனர்.
பிஹாரில் அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இந்த நடைமுறைக்கு ஒத்துழைப்பு அளித்த மக்களை பாராட்டுகிறேன். அதன்பிறகு மிக அமைதியாக பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றினர். எந்தவொரு பகுதியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறவில்லை.
பிஹார் தேர்தல் பிரச்சாரத்தின்போது பொய்கள் பரப்பப்பட்டன. அவற்றை மக்கள் நம்பவில்லை. ஜாமீனில் வெளியே நடமாடும் நபர்களை ஆதரிக்க மாட்டோம் என்று மக்கள் திட்டவட்டமாக தீர்ப்பளித்து உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிஹார் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சிப் பயணம் தொடரும்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியால் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களின் பாஜக தொண்டர்களுக்கு புது சக்தி கிடைத்திருக்கிறது. பாஜக தொண்டர்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை. அவர்கள் மனது வைத்தால் எதையும் சாதிப்பார்கள்.
பிஹாரில் காட்டாட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு உள்ளது. மேற்குவங்கத்தில் தற்போது நடைபெறும் காட்டாட்சியை மக்கள் அகற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிஹார் மாநில தேர்தல் வெற்றி,இந்த மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT