Published : 14 Nov 2025 06:04 PM
Last Updated : 14 Nov 2025 06:04 PM
பாட்னா: பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று வரும் நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில், நிதிஷ் குமார் முதல்வராவது குறித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 91 தொகுதிகளிலும், ஜேடியு 83 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஆர்ஜேடி 27 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
பிஹார் தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் குமார் தலைமையில் போட்டியிடுவதாக பாஜக கூறியிருந்தாலும், அவர் மீண்டும் முதல்வராக வருவார் என்று ஒருபோதும் முறையாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் அறிவிக்கப்படுவார் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சலசலப்பை உருவாக்கியது. அந்தப் பதிவில், "வரலாறு காணாத தலைவர் மற்றும் ஈடு இணையற்றவர். நிதிஷ் குமார் பிஹாரின் முதல்வராக இருந்தார், இருக்கிறார், தொடர்ந்து நீடிப்பார்.” என்று ட்வீட் செய்தது. இருப்பினும், சில நிமிடங்களில் அந்த பதிவு நீக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.
பிஹாரில் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 91 இடங்களிலும், ஜேடியு 83 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் பாஜகவை சேர்ந்தவர் முதல்வராவார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் செய்தது போல், பாஜக தனது தலைவர்களில் ஒருவரை முதல்வர் பொறுப்பில் அமர்த்த பாஜக முயற்சிக்கும் என்று சொல்லப்படுகிறது. 2024 மகாராஷ்டிரா தேர்தலை சிவசேனாவின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் கூட்டணி வைத்து சந்தித்தது பாஜக. ஆனால் பாஜக அதிக இடங்களில் வெற்றவுடன் மகாராஷ்டிர முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றார்.
இதேபோல், பிஹாரில் பாஜகவின் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, முதல்வருக்கான வலுவான போட்டியாளராக இருப்பதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. இருப்பினும், 20 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நிதிஷ், தான் இன்னும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பதை நிரூபித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. எனவே நிதிஷே முதல்வராக தொடர்வார் என்றும் சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT